Sunday, November 30, 2003

முறுக்கு வியாபாரி முனுசாமி 

"It is hard to remain uninvolved" - இப்படி ஒரு வசனம் வருகிறது 'The Quiet American' (முக்கியமான படம். இதுபற்றி இன்னொரு நாள் பேசுவோம்.) திரைப்படத்தில். அது எத்தனை உண்மை தெரியுமா? நீங்கள் என்னதான் பட்டுக்கொள்ளாமல் இருந்தாலும் சில விடயங்கள் நம்மேல் வந்து விழுந்து பிராண்டும்.

பாபர் கைபர் கணவாயைக் கடந்ததைவிட மகா முக்கியமான நிகழ்வொன்று சில வாரங்களுக்கு முன் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது. அது என்னவென்றால் இரண்டு இலக்கியவாதிகள் வாளை எடுத்துசுழற்றிக் கொண்டது. இலக்கியவாதிக்கு எதற்கு வாள் என்று என்னிடம் கேட்காதீர்கள். நல்ல வேளை இதற்காக "பாரத் பந்த்" நடக்காதது நம் பேரதிர்ஷ்டமே.

நிற்க.

நானொரு கதை சொல்லப்போகிறேன். இது தீவிர, மித, மெல்லிய மற்றும் நுண்ணிய என்ற எந்த இலக்கியப் பாகுபாட்டிற்குள்ளும் வராது என்பதை முன்னரே சொல்லிவிடுகிறேன் (என்னைப் போல எல்லோரும் இருந்துவிட்டால் சில பேப்பர்கள் செலவாகாமல் மிச்சப்படும். வலையை பொறுத்தவரையில் சில 'மெகா பைட்டுக்கள்'!). இது என் சொந்தக் கதை. எந்த 'சதவீதத்தினரின்' பிரதினிதியும் அல்ல நான். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. இந்தக் கதை வேறு ஏதாவது நிகழ்ச்சியை நினைவுபடுத்தினால் நான் பொறுப்பல்ல. அது உங்கள் கற்பனை.


முறுக்கு வியாபாரி முனுசாமி
********************

1. சுந்தர காண்டம்

ஒரு ஊரில் ஒரு முறுக்கு வியாபாரி இருந்தார். அவர் கடற்கரையில் முறுக்கு விற்பவர். கடலின் அழகை ரசிப்போரும், காற்று வாங்க வந்தவர்களும், காதலர்களும், கணவான்களும், வயோதிகர்களும்,சிறுவர்களும், ஏன் அங்கேயே முறுக்கு சுட்டு விற்கும் வியாபாரிகளும் கூட இவரின் முறுக்கைச் சுவைத்துவிட்டு, 'நல்லாயிருக்கு', 'அதிஅற்புதம்', 'பரவாயில்லை', 'சகிக்கவில்லை' என்று பலரும் பலவாரியான கருத்துக்களை சொல்லிப்போனார்கள். இப்படி அவரது முறுக்கு விற்பனை ஓடிக்கொண்டிருந்தது.

அதே ஊரில் ஒரு புகழ்பெற்ற ஒரு தியேட்டர் கம்பெனி இருக்கிறது. தியேட்டர் என்றால் அதற்கு முதலாளி, மேலாளர், பொருளாளர், அடியாட்கள் போன்ற இத்யாதிகள் இருக்குமில்லையா? இது ஒரு பக்கம். இந்த திரையரங்கு அதிபதிக்கு வேறு சில வெளி வேலைகளும் உண்டு. அப்படிப்பட்ட வேலைகளில் ஒன்று சாராயக்கடை. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை சாராயக்கடை ஏலம் நடைபெறுவது வழக்கம். அப்போது தன் பலம், புலம், சுற்றம் அனைத்தையும் பயன்படுத்தி சாராயக்கடை ஏலத்த்ல் வெற்றிபெற முயற்சிப்பார் அதிபர். ஊர் என்றால் ஒரு தியேட்டர் மட்டுமா இருக்கும்? ஆக அதே ஊரில் புகழ்பெற்ற இன்னொரு திரையரங்கும் உண்டு. அந்த திரையரங்கின் அதிபரோ ஒரு பெண். (இவரது பிரதாபங்களைப் பற்றிக் கூற இன்னொரு கதையல்ல காவியமே படைக்கலாம். அவையெல்லாம் நம் முறுக்கு வியாபாரக் கதைப்புலத்திற்கு வெளியில் விழுவதால் இப்போதைக்கு விட்டுவிடுவோம்.) அந்தப்பெண் அதிபதியானதோடு நின்றாரா? போனமுறை சாராய ஏலத்திலும் வெற்றி பெற்று ஊரிலுருக்கும் எல்லாச் சாராய கடைகளையும்வழித்துக்கொண்டுவிட்டார். இப்போது இரண்டு திரையரங்கு அதிபர்கள் கதையில் வந்துவிட்டபடியால் முதலில் வந்தவருக்கு கந்தசாமி என்று நாமகரணமிடுகிறேன். (தி.மு.க - தியேட்டர் முதலாளி கந்தசாமி என்று சுருக்கமாக அழைத்துக்கொள்ள நீங்கள் ஆசைப்பட்டால் அதற்கு நான் தடையில்லை!). இன்னொருவரை ஜெயந்தி என்று வைத்துக்கொள்வோமா?சாராயக்கடை ஏலம் நடக்கும் போது நடக்கும் அசிங்கங்களை காணச் சகிக்காது. "நான் என் அண்ணாவைப் போல் கடமை-கண்ணியம்-கட்டுபாட்டோடு வாழ்வேன்" என்று சொல்வாரே தவிர, சாராயக்கடை ஏலம் என்று வந்துவிட்டால் கண்ணியமெல்லாம் காற்றில் பறந்து ஜெயந்தி பெண் என்பதால் சகட்டமேனிக்கு பேசுவார். தியேட்டர் முதலாளி கந்தசாமிக்கு இதுபோல சாராயக்கடை, திரையரங்குத் தொழில் போக மிச்சமிருக்கும் வேளைகளில் முறுக்கு சுடுவதிலும் ஆர்வம் உண்டு. ஆகையால் தன் சினிமாக் கொட்டைகையில் முறுக்குக்கென்று தனி கடையே வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அந்த ஊரில் ஒரு சிறுவனும் இருந்தான். அவனுக்கு வேறு வேலைகள் ஏதுமில்லாததால், அவனது மிதிவண்டியில் கடற்கரை வரை சென்று முறுக்கு வாங்கிச் சாப்பிடுவான். தியேட்டருக்கு போனால் 'ஈ' மொய்க்காமல் இருந்தால் அந்த முறுக்கையும் வாங்கி சாப்பிடுவான். பேதமில்லை. சிறுவனுக்கு விநோதன் என்று பெயரிடுவோமா? விநோதனுக்கு ஊரில் நிறைய நண்பர்கள். அவர்களும் விநோதனைப் போலவே மிதிவண்டியோட்டிகள்.

--------------------
2. யுத்த காண்டம்

ஒரு நல்ல மாலை நேரத்தில் நல்ல கூட்டம் வரும் சமயம். நம் முறுக்கு வியாபாரி அன்று புதிதாய் சுட்ட முறுக்குகளை விற்பதற்கு கூட்டம் சேர்த்தார். முறுக்கு விற்பவர் தன் புதிய முறுக்கைப் பற்றியோ அல்லது தான் இதுவரை சுட்ட ஆயிரக்கணக்கான முறுக்குகளைப் பற்றியோ சொல்லி முறுக்கு விற்றிருக்கலாம்; அல்லது முறுக்கு சுடும் கலையைப் பற்றி சொல்லியிருக்கலாம். வெளியூர்களில் எப்படி முறுக்கு விற்கிறார்கள்; சுடுகிறார்கள் என்று அலசியிருக்கலாம். இல்லையென்றால் "பொதுவாக தியேட்டர் போன்ற பொதுவிடங்களில் விற்கும் முறுக்குகளில் 'ஈ' மொய்க்கும்; காரலான எண்ணெயில் செய்தது; அது சுகாதாரக் கேடு" என தன் அபிப்ராயத்தை சொல்லாம். இப்படித்தான் நேர்மையான வியாபாரிகள் முறுக்கு விற்பார்கள். வியாபார தர்மம் என்று ஒன்றிருக்கு இல்லையா?

ஆனால் நம் கடற்கரை வியாபாரியோ அப்படியெல்லாம் நேர்மையாகவோ மதிப்பாகவோ நடந்துகொள்ளாமல் "தியேட்டர் முதலாளி கந்தசாமி சுடும் முறுக்கெல்லாம் முறுக்கேயல்ல. நான் சுடுவது மட்டும் தான் முறுக்குவகையில் சேரும்." என்று சொல்லிவிட்டார். முறுக்கு சுவைக்க வந்த கடற்கரைக் கூட்ட்த்தில் சலசலப்பு. தேவையில்லாமல் ஏன் தியேட்டர் முதலாளியை வம்புக்கிழுக்கவேண்டும் என்று தோணும் போதே நம் முறுக்கு வியாபாரி ஒரேயடியாகப் போட்டார் இப்படி - "கடற்கரையில் முறுக்கு விற்கும் எல்லோர் சார்பாகக் கூறுகிறேன். கந்தசாமியின் முறுக்கு நமத்துப் போனது. அது பழைய சரக்கு". உடனே கடற்கரை முறுக்கு வியாபாரிகள் இந்த ஆள் சேர்ப்பு வித்தையில் மயங்கி 'ஆமாம் ஆமாம்' என்று தலையாட்டினார்கள்.

சேதி எப்படியோ கந்தசாமிக்கு எட்டிவிட்டது. திரையரங்கு முதலாளி கந்தசாமி ஊரில் பெரும் புள்ளி. கடற்கரையில் முறுக்கு விற்பவர் சொல்வதால் திரையரங்கில் முறுக்கு வியாபாரம் ஒன்றும் பாதித்துவிடாது. இது தெரிந்து கண்ணியமாக தன் பெரிய மனிதத்தனத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். வழக்கம் போல கண்ணியம் காற்றில் பறந்தது. வார்த்தைகள் வரம்பு மீறி வந்துவிழுந்தன. தன் தியேட்டரில் இடைவேளையில் 'முறுக்கு வியாபாரி முணுசாமி கடற்கரையில் திரியும் ஒரு கழுதை' என்று சிலைடு போட்டுக் காண்பித்தார். தியேட்டரில் சினிமா பார்க்க வந்த பல பேருக்கு அன்றைக்குத் தான் முனுசாமி என்பவர் கடற்கரையில் முறுக்கு விற்கிறார் என்று தெரியவந்தது என்பது வேறு விஷயம்.

கடற்கரையில் முறுக்கு விற்கும் சிலர் வேட்டியை மடித்துக் கொண்டு தங்களின் முறுக்கு டப்பாக்களையும் கீழே கிடாசிவிட்டு நம் முறுக்கு வியாபாரிக்கு கட்சி சேர்த்தார்கள். கடற்கரை வழியாகப் போகும் எல்லா பேருந்துகளிலும், ஊர்திகளிலும் இதே பேச்சு. ஒரு சிலர் தியேட்டர் முதலாளி பக்கம்; ஒரு சிலர் முறுக்கு வியாபாரி பக்கம். இரண்டு கட்சிக்காரர்களும் கையில் கிடைத்ததை எடுத்து வீசிக்கொண்டார்கள். கடற்கரைச் சாலையே கலவரப் பகுதியாகிவிட்டது.

கொஞ்ச நேரம் கழித்து கலவரம் ஓய்ந்தாற் போலிருந்த சமயத்தில் எல்லாத் 'திசைகளுக்கும்' சென்றுவிட்டு அந்தப் பக்கமாக வந்த பேருந்தின் ஓட்டுனர் தியேட்டர் முதலாளி கந்தசாமியின் நண்பர் போலும். முதலாளி சொன்னது தான் 'ரைட் ரைட்' என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பிச் சென்றுவிட்டார். அதுவரைக்கும் விநோதனைப் போலவே பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மிதிவண்டியோட்டிகள் இப்போது கலகத்தில் கலந்து கொண்டுவிட்டனர். சம்பந்தப் பட்டுக் கொள்ளாமல் போகும் பேருந்துகளை நோக்கி கற்களை வேறு வீச ஆரம்பித்தார்கள். இப்படியாக பல வாரங்களுக்கு முற்றிய இந்தச் சண்டை சரித்திரத்தில் 'முறுக்கு வியாபாரக் கலகம்' (சிப்பாய் கலகம் போல) என்று பெயர் பெற்றது.

விநோதனுக்கோ பெரும் கவலை - 'என்னடா நம் நண்பர்கள் போய் இந்த கைகலப்பில் கலந்துகொண்டார்களெ' என்று. முறுக்கு வியாபாரச் சண்டையில் முறுக்கு சுடும் கலை முடங்கிப் போய்விட்டது. முறுக்கு சுட செலவழிக்கும் நேரத்தை விட இந்த வெட்டிச் சண்டையில் தான் நேரத்தை செலவழிக்கிறார்கள் சுத்தமாய் முறுக்குக் கலைஞர்கள். சண்டை போடுகிற நேரத்தில் எப்படிச் சுவையாக முறுக்கு சுடலாம் என்று யோசித்திருந்தால் முறுக்குப் பிரியர்களுக்கு நாலைந்து நல்ல முறுக்குகளாவது கிடைத்திருக்கும்.

-------------------
3. அந்திமக் காண்டம்

விநோதனுக்கும் முறுக்கு சுடுவதில் ஆர்வமிருக்கு. எந்த முறுக்குப் பிரியருக்குத் தான் தானே முறுக்கு பிழிந்து சுவைப்பதில் ஆசையிருக்காது? விசாரித்துப் பார்த்ததில் இப்படிப் பட்ட முறுக்குச் சண்டைகள் நிறைய நடப்பது முறுக்குலகில் சகஜம் என்றும் தெரிந்துகொண்டான் விநோதன். தன் ஊரில் நிறையப்பேர் முறுக்கு சுடுவதில் வித்தகர்களாக இருந்தாலும் இந்தச் சச்சரவுகளில் சிக்கிச் சீரழிந்து விடுவோமோ என பயந்து தங்களின் வீட்டிலேயே முறுக்கு சுட்டுச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கி விடுகிறார்கள் என்பதும் தெரிய வந்தது. பிற்காலத்தில் தானும் சுவையான முறுக்குகள் சுட்டு தன் ஊரிலே விற்கலாம் என்று கண்ட கனவு பரணிலிருந்து விழுந்து நொருங்கும் அடுக்கு முறுக்குகளைப் போல் சின்னாபின்னமாகிப் போனது. நல்ல வேளையாக தனக்கு மிடிவண்டியன்று இருப்பது சட்டென்று நினைவில் உதிக்கவும், தன் போலவே உள்ள சக முறுக்குப் பிரியர்களை அழைத்துக் கொண்டு வேறு வேறு ஊர்களுக்கு சென்று முறுக்கு வாங்கிச் சாப்பிடலாம் என்று கிளம்பிவிட்டான் விநோதன்.

விநோதனுக்கு மிதிவண்டி இருக்கு; பெடலை அழுத்திக் கிளம்பிவிட்டான் வேறூரைப் பார்த்து. என் போன்ற பாதசாரிகள் என் செய்வது? முறுக்குச் சண்டைகளைப் பார்த்துக்கொண்டே சாகவேண்டியது தான்.

கதையின் நீதி: யார் யாருக்கு முறுக்கு சுட வருகிறதோ அல்லது ஆர்வமிருக்கிறதோ சுட்டுப் போடுங்கள். சுவையான முறுக்கு விற்றுத் தீரும்.

Comments: Post a Comment