Wednesday, November 05, 2003

ஒரு வீதி நாடகக் கலைஞனுக்கு வெற்றி!! 



சப்தர் ஹஷ்மியை ஞாபகம் இருக்கிறதா? உங்களுக்கு ஞாபகம் இல்லாமலிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. காஸியாபாத் வீதிகளில் அவரை அடித்துக் கொன்றவர்களே மறந்துவிட்டிருப்பர் அவரை.

1989, ஜனவரி 1ம் நாள். ஜந்தாபூர் முனிசிபல் தேர்தல் சமயத்தில் 'உரக்கப் பேசு' (halla bol) என்னும் நாடகத்தை வீதியில் நிகழ்த்திக் கொண்டிருந்த போது குண்டர் படையால் நடுவீதியில் அடித்துக் கொள்ளப்பட்டனர் ஹஷ்மியும் அவரது சக நடிகர் ராம் பகதூரும். சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தோர் அதுவும் நாடகத்தின் ஒரு பகுதி என்றே நினைத்திருந்தனர் வெகு நேரம் வரையில்!

ஜன் நாட்ய மன்ச் என்கிற வீதி நாடக அமைப்பின் தலைவரும், மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருமான அவரைக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரில் இருவர் இறந்துவிட்டனர்! மீதமுள்ள பத்துப்பேரும் குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்டுள்ளனர் பதினான்கு வருடங்களுக்குப் பிறகு. என்ன சொல்லி மெச்ச இந்திய நீதித்துறையின் சுறுசுறுப்பை? 'ஊழ்வினைப்பயன்' (இந்த ஜென்மத்தில் செய்யும் தவறுகளுக்கு அடுத்த ஜென்மத்தில் தான் தண்டனை கிடைக்கும்!) என்னும் இந்துமத சாரத்தை நிலைநிறுத்துகிறார்களா?

காலம் கடந்து வந்தாலும் நீதி கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியே. இதை சப்தர் ஹஷ்மி என்கிற வீதி நாடகக் கலைஞனுக்கு கிடைத்த வெற்றி என்பதைவிட அரசியலில் வன்முறையைக் கலக்கும் வெறியர்களுக்கெதிரான பாடமாகக் கருதுதலே சரி. இது போன்ற வன்முறை வழக்குகள் நாடெங்கும் நூற்றுக் கணக்கில் நிலுவையில் உள்ளன. எத்தனையோ பேர் ஆளுங்கட்சிக்காரர்களாலும் அரசியல் செல்வாக்குப் பெற்ற ரவுடிகளாலும் கொலை செய்யப்படுகிற போது, அரசியல் எல்லைகளைத் தாண்டி சப்தர் ஹஷ்மி பேசப்படுவது அவர் வீதி நாடகக் கலைஞர் என்பதால். அவர் ஜனநாயக முறையில் தனக்கே உரிய அழகியல் பாணியில் தன் கருத்தைச் சொல்லியபோது அடித்துக் கொல்லப்பட்டதால்.

ஊழலுகெதிராய் குரலெடுத்து வெட்டிக்கொள்ளப்பட்ட மதுரை பெண் கவுன்சிலர் லீலாவதிக்கு என்று நீதி கிட்டுமோ?

Comments: Post a Comment