Thursday, November 06, 2003

விழாக்கோலம் பூண்டிருக்கு வானம்! 



சில வாரங்களாகவே வானம் நமக்கு பல (வான?!)வேடிக்கைகளைக் காட்டி வருகிறது. சூரியப்புள்ளிகளின் சேஷ்டை நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துகொண்டே போகின்றன. செவ்வாயன்று நிகழ்ந்த சமீபத்திய வெடிப்பு X28ம் ரகத்தைச் சேர்ந்ததாம். இதுவரை ஏற்பட்டதிலேயே பெரியது.

இந்தச்சேதியைத் தெரிந்துகொண்ட சந்திரனும் கேளிக்கையில் கலந்து கொள்ள உத்தேசித்துள்ளது. நமக்கு கொண்டாட்டம் தான் போங்கள்!

டம டம டம டம டம டம டம டம் டம் டடடம் டடடம் டாம்...
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது யாதெனில், நவம்பர் 8ம் தேதி (வரும் சனிக்கிழமை) மாலை 8:06 மணியளவில் வட அமெரிக்கக் கண்டத்தில் வடக்கேயுள்ள கீழைக்கடற்கரைப் பகுதிகளில் "நிலாப் பெண்ணின் கண்ணாம்பூச்சி" என்கிற வான வேடிக்கை (அரைமணி நேரம் மட்டுமே) நிகழ்த்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
டம டம டம டம டம டம டம டம் டம் டடடம் டடடம் டாம்...

பூரண சந்திர கிரகணம் ஏற்படவிருக்கிறது. ஐக்கிய மாகாணத்தில் வடகிழக்குக் கரையோரம் இருப்போர் பாக்கியசாலிகள். சரியாக இரவு 8:06க்கு பூரணம் தொடங்குகிறது. 25 நிமிடங்கள் தான் இருக்கும் இந்தக் கிரகணம். weather.com-ல் பார்த்துவிட்டேன். அதுவும் ஒத்துழைக்கிறது. ஆகவே அன்று மாலை வேலை வெட்டி எது இருந்தாலும்(சனிக்கிழமை ஆபிஸ் போகும் புண்ணியவான்கள் வெளியே வந்து எட்டிப்பார்த்துவிட்டாவது போங்கள்) அப்படியே போட்டுவிட்டு வானத்தை அண்ணாந்து பார்த்து அதிசயிக்க ஆஜராகிவிடுங்கள். 1

ஐரோப்பியக் கண்டத்தில் இருப்போர் முழித்திருந்தால் பார்க்கலாம். அவர்களுக்கு 1:06க்கு பூரணம் வரத்துவங்கும். ஆசியக்கண்டத்தில் இருப்பவர்கள் நன்றாக இழுத்துப் போர்த்தி தூங்கவும். உங்களுக்கு அடுத்தவருடம் மே-4ம் நாள் பூரண கிரகணம் காண்பிக்கப்படும் என்று பட்சி சொல்கிறது.

அடியேன் தொலைநோக்கி உதவியோடு நிழற்படம் எடுக்கலாம் என்றிருக்கிறென். எடுத்தால், கிரகண சித்தி நல்லபடியாய் அமைந்து ஒழுங்காக வந்தால் இங்கு இடுகிறேன். இல்லையேல் கிரகண பலன் கழிக்க குப்பைத்தொட்டியில் சேர்த்துவிடுகிறென்.

Special thanks to Stephen Barnes for the eclipse picture.

Comments: Post a Comment