Friday, December 12, 2003

சுய மதிப்பீடா? தம்பட்டமா? 

மென்பொருள் உலகில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தால் வருடாவருடம் ஒரு அசிங்கத்தை செய்யவேண்டி வரும். வெட்கம் கெட்டுப்போய் 'நான் அதை செய்தேனாக்கும்; இதை புரட்டிப் போட்டேனாக்கும்' என்று பீற்றிக்கொள்ள வேண்டும். இந்த அறுவறுப்பிற்கு ஆங்கிலத்தில் 'Self-Appraisal' என்று பெயர். 'சுய மதிப்பீடு' என்கிற இந்த பண்பாடு நம் கலாச்சாரத்திற்கும் பணியிடங்களுக்கும் மிகவும் புதியது. நம்மை நாமே எடை போடுதல் சற்று கடினமானதும் வித்தியாசமானதும் ஆகும். பன்னாட்டு நிறுவனங்களும் அதன் பணியிடப் பண்பாடுகளும் நம்மை வந்து அழுத்தியபின் நமக்குப் பழக்கமில்லா அதன் நெறிமுறைகள் பல குழப்பங்களை விளைவிக்கின்றன.

தொன்று தொட்டே நாம் ஆசிரியர்களால் தான் மதிப்பிடப் பற்றிருக்கிறோம். 'எதைச் செய்யவேண்டும்?', 'எந்த துறை நமக்கு ஏற்றது, பிடித்தது?', 'எந்தக் கல்லூரிகள் சிறந்தவை?' போன்ற முக்கியமான சில வாழ்க்கைப் படிகள் நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறதே தவிர நம்மால் சிந்திக்கப்பட்ட்வையல்ல. பெரும்பாலான இளைய சமூகம் பெற்றோரால் பராமரிக்கப்பட்டது; சுய சிந்தனாவழியில் உருவானதல்ல(pruned not self-evolved). கலைக்கல்லூரிகளிலும் தொழிற்கல்லூரிகளிலும் மிகக்குறைந்த சதவீதத்தினரைத் தவிர மற்றெல்லோருக்கும் அறிவு ஊட்டப்பட்டது. நாமாக தேடிப் பெற்றது சொச்சமே. வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும் வினாத்தாள்களாலும் ஆசிரியர் என்கிற சர்வ வல்லமை படைத்த மனிதர்களாலும் தான் நம்முடைய அறிவுத்திறன், சிந்தனைத்திறன், பேச்சுத்திறன், எழுதுதிறன், கற்பனை வளம் எல்லாமும் எடை போடப்பட்டன. சுய மதிப்பீட்டிற்கு வேலையே இல்லாமல் போயிற்று.

இப்படிப்பட்ட சமூக அடிப்படையோடு வந்த நமக்கு "எப்படி சுய மதிப்பீடு செய்யவேண்டும்?" என்ற முதலில் வரைமுறைகளும் பாடங்களும் தேவை. சில அளவுகோல்கள் தரப்பட வேண்டும். குறைந்த பட்சம் இந்த நடைமுறைகள் பழகும் வரையிலாவது. 90-களின் பிற்காலத்தில் தோன்றிய மென்பொருள் உற்பத்தியை மையமாகக் கொண்ட 'சேவைத்துறை' நிறுவனங்களில் சுய மதிப்பீடு அடிப்படையிலான ஊதிய-பணி உயர்வை கட்டாயமாக்கினார்கள்.

'அவையடக்கம்', 'நிறைகுடம் ததும்பாது' போன்ற சான்றோர் மொழிகளில் நம்பிக்கை கொண்டோர் முதன் முதலில் இந்தக் கண்ணாம்பூச்சி விளையாட்டில் பங்கு பெறும்போது நேக்குகள் தெரியாமல் மிக நேர்மையாக விமர்சனம் செய்துகொள்வர். சிலர் என்ன எழுதுவது தெரியாமல் தனக்கு தோன்றியதை எழுதிவிடுவார்கள். சிலர் நண்பர்களிடமோ இந்த வித்தையில் பழம் தின்று கொட்டை போட்ட முன்னோடிகளிடமோ கேட்டு கதைவிடுவார்கள். சில மாதங்கள் கழித்து மதிப்பீடுகளின் முடிவு வெளியாகும் போது வேடிக்கையாக இருக்கும். நேர்மையான மதிப்பீடுகளெல்லாம் நம் மேல் மண்ணைவாரித் தூவியிருக்கும். 'சுய மதிப்பீடு' என்பதன் உண்மையான முகம் அப்போதுதான் பலருக்கு தெரிய வரும் - அது நிஜமான சுய விமர்சனமல்ல. அது தற்பெருமையின் மற்றொரு வடிவம் தான் என்று.

'சுய மதிப்பீட்டுக்' கலையில் எல்லா குறைபாடுகளுக்கும் அழகான கவர்ச்சியான வேறு பெயர்களிட்டு அழைக்கவேண்டும். உதாரணத்திற்குச் சில:

'Mainframe' தவிர ஒன்றுமே தெரியாது - 'Strong competancy in Legacy systems'

நேரம் காலம் தெரியாமல் வேலை செய்வது - 'Can perform with flexible timings'

சக பணியாளர்களிடம் சதா கதை பேசிக்கொண்டிருப்பது - 'Strong team building capability'

இப்படியாக நீளும் இப்பட்டியல். சுய மதிப்பீட்டு அமைப்பின் முக்கியமான வெற்றியே உங்களிடம் உள்ள குறைபாடுகளை உங்களைக் கொண்டே தோண்டியெடுப்பதுதான். ஆகவே உங்கள் குறைகளை எப்படி சாயம் பூசிக் காட்டுகிறீர்கள் என்பதைப் பொருத்து பலன்கள் மாறுபடும்.

குறைபாடுகளை குறைபாடுகள் என்று கூட அழைத்துவிடக் கூடாது. 'Areas of Improvement' என்று சூசகமாகக் குறிப்பிடவேண்டும். எப்போதுமே Excellent, Outstanding, A+, A++ வாங்கவேண்டும். 'Good' அல்லது வெறும் A மட்டும் வாங்கினால் நீங்கள் மோசம் என்று அர்த்தம்!! B வாங்கினால் வேறு வேலை பார்த்துப் போய்விட வேண்டியதுதான். Only superlatives are allowed to be in the company!

சுய மதிப்பீடு என்பதெல்லாம் பெயரோடு நின்றுபோய்விட்டது. ஐந்து சதவீதம் செய்த ஒரு வேலையை ஐம்பதாகக் காட்டிக்கொள்ளும் இழிவிற்குப் பெயர்தான் இப்போது 'self-appraisal'. வாழ்க்கையில் சில நியதிகளைக் கொண்டு வாழும் மனிதர்களும் கூட இந்த போட்டியில் துவண்டுவிடக்கூடாதே என்கிற ஜாக்கிரதையில் வேறு வழியின்றி சுய தம்பட்டம் செய்துகொள்ள வேண்டியதாகிவிடுகிறது. பலருக்கும் நாள் போக்கில் அதுவே பழக்கமாகிவிடுகிறது. இப்போது மென்பொருள் இலாக்காவைச் சேர்ந்தவர்களிடம் பழக நேரும் போது அதிக கவனம் தேவைப்படுகிறது.

ஒவ்வொரு நபருக்கும் ஒரு சில நல்குணங்கள் உண்டு. ஒரு சுயம் இருக்கும். ஒரு கலைஞரோ, ஓவியரோ, வடிவமைப்பாளரோ, பேச்சாளரோ, கணிதவியலாளரோ, தொழில்நுட்ப முனைவரோ அல்லது வணிக மூளை கொண்டோரோ எல்லொரிடமும் உறைந்துகிடக்கிறார். இப்படி தனிமனிதரின் துறைசார் ஆர்வமும் உள்ளார்ந்த ஈடுபாடும் சந்தைப் பொருளாதாரம் கொண்டுவந்த இப்புதிய கலாச்சாரத்தில் மறுக்கப்படுகின்றன. ஒவ்வொருவரிடமும் ஒரு சில குறிப்பிட்ட தண்மைகளையே இந்நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அவைகளுக்கு வேண்டியதெல்லாம் ஒற்றைத்தண்மை கொண்ட வேலையாட்கள் - அல்லது மென்பொருள் எழுதி, பேசத் தெரிந்த, குறைந்த கூலியில் வேலையை முடித்துக் கொடுக்கும் மனித ரோபாட்டுகள்.

Comments: Post a Comment