Saturday, December 06, 2003
முதல் பனி
பனி பொழிந்துகொண்டிருக்கிறது விடியலிலிருந்து, தேங்காய்ப்பூ துருவலாய். பாரபட்சமின்றி வானம் தூவுகிறது எல்லா ஜீவ ராசிகள் மீதும். உறக்கம் கழிந்ததும் காபியின் கதகதப்பைக் கையிலடக்கிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது சுகமாயிருந்தது. இரக்கமற்ற பனியில் நனைந்த இறக்கைகளை உதறிக்கொண்டு மூச்சுத்திணறாமல் மீண்டு பறக்கின்றன காக்கைகளும் அதன் நண்பர்களும். மயிர்களை உதிர்த்த மரக்கொம்புகள் புதிதாய் வளர்க்கின்றன கொத்து நரைகளை. இருட்டுக்கு முன் விழித்துக்கொண்ட சாலைப்பணியாளர்கள் குறுக்கும் நெடுக்குமாய் வழித்துக்கொண்டு போகிறார்கள் சாலைக்குச் சவரம் செய்து கொண்டு. அழகியல் மறந்த அவர்களின் ஊர்திகள் பட்டுபோல் படர்ந்திருக்கும் வெண்மையை சிதைத்து அலங்கோலம் செய்து போகின்றன. இறுக்கமான அமைதியும், வரம்புகளை மீறித் ததும்புகிற எச்சரிக்கையும், ஒருவித அவசரமான அசமந்தமும் எல்லோர் மீதும் அப்பிக் கிடக்கிறது தந்திக்கம்பங்களிலும் பெயர்ப்பலகைகளிலும் சேர்ந்திருக்கும் அழுக்கான பனி போல். வெண்மையும் அழுக்காய் தோன்றியது இன்று.
தாத்தாக்களும், பாட்டிகளும் வேடிக்கை பார்க்கிறார்கள் ஒவ்வொரு ஜன்னலின் பின்னாலிருந்தும் - எங்களை அவர்களும், அவர்களை நாங்களும். ஏதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டது போலிருக்கிறது அவர்களின் பாவனை. ஆக்ரோஷமாய் மோதிப்பார்க்கின்றன மேகம் அனுப்பிய வெள்ளைச் சிப்பாய்கள்; என் கதவுகளுக்குள் சிறைப்பட்ட வெம்மையின் உக்கிரம் தாளாமல் தொட்ட மாத்திரத்தில் தொலைந்தும் போகின்றன. கார் நிறுத்துகளம் வெள்ளையாய் கம்பளம் போர்த்திக் கிடப்பதால் மானசீகமான எல்லைகளை வரைந்து கார்களை கிடத்திவிட்டு அலுவலகக் கதவுகளை நோக்கி விரைகிறார்கள் சகாக்கள். யாரையும் இதற்கு முன் இத்தனை ஆர்வமாய் வேலைக்குச் சென்று நான் கண்டேனில்லை. எல்லாத் தளங்களிலும் மனிதர்களைக் காட்டிலும் காப்பிக் கோப்பைகள் தாம் நடமாடிக் கொண்டிருந்தன. அவைகளில் இருந்து நறுமணத்தோடு வெளிக்கிளம்பும் சூடான புகை பொதுவான சுறுசுறுப்பை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. முதல் பனியின் உற்சாகம் எல்லோருக்கும் - வயது, தகுதிகளை மீறிக்கொண்டு. ஊழியம் செய்வதை விடுத்து சற்றைக்கொருமுறை ஜன்னலுக்கு அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டார்கள். இருள் கவிழ்ந்த அந்த மத்தியான வேளையில் கவிதை பிறந்தது.
கசங்கிய மூளை சுமந்து
திரை விலக்கி எட்டிப்பார்க்கும்
ஜன்னல் முகங்கள்.
நிறம் மங்கிய சாம்பலின் ஊடே
வந்தமரும் பட்சியிடம் சொல்கிறது
தொடர் பொழிவின் சலிப்பை
முனகலாய் உதிரும் சோடியம் ஒளி.
மூன்றாம் தளம் வரையில் கேட்கிறது
வீடு கிளம்பும் பணியாள் சுரண்டும்
உறைந்த கண்ணாடிப் பனி.
தேங்கிய வேலையின்
அறுபடாத நார் சுண்டியிழுத்தது
தூண்டிலில் சிக்கிய என்னை.
தனித்த மரத்தின்
ஒற்றைக் கிளையில்
தொங்குகிறது
அறுந்த என் கவிதை.

Comments:
Post a Comment