<$BlogRSDUrl$>

Friday, August 29, 2003

மசால் பொறி

'அல்வா' என்றதும் என் குதிரை கிளம்பிவிட்டது.
மனைவி இங்கு பிலடெல்பியாவில் 'அல்வா' கேட்டு பன்ற கரைச்சலுக்கு அளவே கிடையாது. மதுரையி
ல் 'தங்கம்' தியேட்டருக்கு பக்கத்தில் ஒரு முக்கில் 'திருநெல்வேலி' அல்வா கிடைக்கும். இலையில்
தருவார்கள். வாயில் போட்டவுடன் லபக்கென்று வழுக்கிக் கொண்டு உள்ளே போய் விடும். அட...ச்சே என்று
இன்னொரு முறை வாங்கத்தூண்டும். சாயங்காலம் 3 மணிவாக்கில் 'அல்வா'க்கூட்டம் கூட ஆரம்பித்துவிடும்.

கிளைக்கதை:குரோம்பேட்டையில் படிக்கும் போது நண்பன் சட்டநாதன் அரைக்கிலோ அல்வா வாங்கிவந்து வி
டுதி அறையில் தானாக அத்தனை அல்வாவையும் சாப்பிட்டு முடிப்பான். பொய்யில்லை நிஜம். தமாஷாக
இருக்கும். எனக்கும் இனிப்புக்கும் கொஞ்ச தூரம்.

பழனியில் நிறையப்பேர் வீட்டிலேயே பஞ்சாமிர்தம் செய்வார்கள் (ரெசிபி இப்பொ கைவசம் இல்லை. வீட்டில்
கேட்டுச் சொல்கிறென்). பழனி பஞ்சாமிர்தம் ரொம்பவும் பிரசித்தம் என்றாலும் 'தேரடித்திடலுக்கு' பக்கத்தி
லிருக்கும் செட்டியார் கடையில் கிடைக்கும் 'மசால் பொறி' தான் எனக்கு அமிர்தம்.(விகடனில் கூட ஒருமுறை
இது பற்றி வந்தது) எத்தனை தடவை கேட்டாலும் செட்டியார் ·பார்முலாவை சொல்லமாட்டார். பொறி, தட்டை
முருக்கு, தேங்காய் எண்ணெய், அவருடைய ·பார்முலா மசால் எல்லாம் போட்டு பிளாஸ்டிக் கோப்பையில்
கரண்டியைக் கொண்டு 'கிர் கிர்ரென்று' சுழட்டி பேப்பர் கூம்பில் தலைகீழாகக் ஒரு கவுத்து கவுத்தி நீட்டுகி
ற அழகுக்கு இன்றும் நான் அடிமை. ஒவ்வொர் கடைக்கும் ஒரு ருசி உண்டு கைரேகை போல.

சின்ன வயதில் அம்மா வாங்கித்தந்த 'வெட்டு போன்டா' (சில ஊர்களில் இதை 'ஆட்டுக்கால் போன்டா' என்
விளிப்பதுண்டு) எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அப்புறம் எட்டணாவிற்கு கிடைக்கும் மினி வடை போன்டாக்கள். ரயில்வே ·பீடர் ரோடு முழுக்க நூறு-இரு
நூறு அடி தூரம் இடைவெளிக்கொரு ஸ்டால் இருக்கும். பெட்ரோமாஸ் வெளிச்சத்தில் ரோட்டை அலங்கரிக்கும்
இந்தக்கடைகளிலிருந்து கிளம்பும் வடை வாசம் கிரங்கடிக்கும். நான் வழக்கமாக ஒரு பாயிடம் வாங்குவேன்.
இன்றைக்கு போனாலும் இலவசமாக ஒன்றிரண்டு வடைகள் கிட்டும். ரெண்டு ரூவாய்க்கு வாங்கினால் வீடு வரை
சைக்கிளை தள்ளிக்கொண்டே கோகுலும் நானும் உலகவிஷயங்களை மெல்லுவோம். ஜெயகாந்தன், ஐன்ஸ்டீன்,
மதுரை மணி ஐயர், மார்க்ஸ் எல்லாரும் வந்து போவார்கள். ஏனோ மெட்ராஸிலும் கிடைக்கும் இந்த மினி
வடைகளில் மனம் ஒட்டவில்லை. சைக்கிளும் இல்லை. பேச கோகுலும் இல்லை.

மெட்ராஸ¤க்கென்று தனி வாசனைகளும் சுவைகளும் உண்டு. இன்னொரு முறை எழுதுகிறேன்.

Thursday, August 28, 2003

விமானக்கோடுகள் அற்ற வெய்யில் வானம்
கனவுகள் கலைக்காத உறக்கம்
குண்டுகள் வெடிக்காத் திங்கள்
Wednesday, August 27, 2003

முற்பகல் கடந்த உறக்கம்
ஃப்ரீசரில் சில்லிட்ட முக்கோணப் பிட்ஸாக்கள்
மென்பொருள் ஞாயிறு


Friday, August 22, 2003

குளியலும் குளியல் சார்ந்த நினைவுகளும் - பாகம் 2
-------------------------------------------
எத்தனை வகை சோப்புக்கட்டிகள் இன்று!
ஆழ் கழுவிகள் (Deep Cleansers), நுண்ணுயிர் எதிர்ப்பான்கள்(Anti-bacterials), அதி அற்புத ஈரம் தேக்கிகள்(ultra Moisturizers), நாற்றக் குறைப்பான்கள் (odor controllers), ஆடவர் பெண்டிர் குழந்தைகளுக்கென தனித்தனியான சோப்புகள், சோப்பேயில்லாத சோப்புகள்(soap-less soaps) என நீள்கிறது இந்தப்பட்டியல். இப்பொது சோப்புக்கட்டிகள் (Soap Bars) பயன்படுத்துவது சுத்தக் குறைவாம்! நீங்கள் சோப்பைக் குழைத்துவிட்டு வைக்கும் போது ஈரமும் உங்கள் மேனியில் இருந்த அழுக்கும் நுண்ணுயிரிகள் பெருக வழி வகுக்குமாம். ஆக இனி சோப்புக்குழம்பிகள் (Soap Solutions) வாங்குதலே சாலச்சிறந்தது என்று நான் சொல்லவில்லை... வலைப்பக்கங்கள் சில சொல்லுகின்றன.

‘As Good As It Gets’ படத்தில் ஜாக் நிகல்சன் வார்த்த பாத்திரம் ஞாபகம் இருக்கா? அதைப்போல எல்லோருக்கும் OCD (Obsessive Compulsive Disorder) வந்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

Soap என்ற வார்த்தையை கூகுலிட்ட போது 5,160,000 பக்கங்கள் கொட்டின - Soap Opera முதற்கொண்டு Simple Object Access Protocol (soap 1.1) என்கிற மென்பொருள் வரையில்.

மிருகக் கொழுப்பையும், சாம்பலையும் சரியான அளவில் கலந்து தண்ணீரில் கொதிக்க வைக்கும் போது கிடைக்கும் குழைவான படலம் தான் சோப்பு என்றால் நாளையிலிருந்து யாரும் சோப்பு பக்கம் தலை வைத்து படுக்க மாட்டீர்கள். இன்றைக்கு யாரும் இப்படி சோப்பு தயாரிப்பது இல்லை. நல்ல வேளையாக சோப்பு டெக்னாலஜி ரொம்பவே வளர்ந்துவிட்டிருக்கிறது.

நம்பாதவர்கள் இங்கு படித்துப் பாருங்கள்.

பாக்டீரிய-எதிர்ப்பான்களை சேர்ப்பதா கூடாதா என நுண்ணுயிர் ஆய்வாளர்களும் சோப்புக் கம்பெனிகளும் ஒரு ஓரமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

என் பாட்டனார் சாகும் வரை கோவனம் கட்டிக்கொண்டு தேங்காய் நார் குளியல் செய்து கொண்டு சவுக்கியமாய் வாழ்ந்தார். எங்கள் வீட்டில் வெகு நாட்கள் வரை ‘மார்(g)கோ’ காண்டம். பின்பு ‘ஹமாம்’ காண்டம். அந்த நாட்களில் நான் மிகவும் வெறுத்த ஒரு சோப்பு 'மார்கோ'. நாள் முழுக்க மேனியெங்கும் ஒரு வித கசப்பு வீற்றிருப்பதாய் தோன்றும். அப்புறம் 'பியர்ஸ்' என்கிற கண்ணாடிச் சோப்பின் மேல் காதல் வந்தது. வேதியியலில் அதை 'கிளிசரின்' சோப்பு என படித்ததாக ஞாபகம். அ.ஐ.நா (U.S.A)வந்ததும் மென் சோப்புக்களின் பரிச்சயம் கிட்டியது.

அடடா! மறந்தே போச்சு. நீண்ட நேரம் குளித்தால்... ஜலதோஷத்தை விடுங்கள்... மாத்திரை போட்டால் ச்சு. மேல் தோலில் இருக்கும் எண்ணெய்ப் பசை போயிடுமாம்.

குளியல் சம்பந்தமான சில வாசனை(சுவை)யான செய்திகள்:

why fingers wrinkle?
http://www.sciam.com/askexpert_question.cfm?articleID=00027EB9-642A-1C72-9EB7809EC588F2D7&catID=3

why soaps lather?
http://discover.com/search/index.html

cleaning agents
http://www.sciam.com/article.cfm?articleID=00072CA6-42A8-1C75-9B81809EC588EF21&pageNumber=1&catID=2

Saturday, August 16, 2003

குளியலும் குளியல் சார்ந்த நினைவுகளும் - பாகம் 1

இத்தனை நேரம் குளிக்க இங்கு வந்துதான் பழகிக்கொண்டேன். 'இத்தனை நேரம்' என்று நினைவுபடுத்திக் கொள்ளுமளவிற்கான குளியலை இதுவரை செய்ததாய் நினைவு ஏதுமில்லை. சில நேரம் துவட்டும் போது என் சிறுவயதுக் கைகளுக்கு எட்டாத முதுகுப் பகுதிகளில் ஈரம் இருந்து, அது அம்மாவின் கண்களில் பட, வாங்கிக் கட்டிக்கொண்டு, இன்னொருமுரை அழுத்தித் துடைக்கப் பிரையாசைப்பட்டு, ஊரிய அழுக்கும் சோப்பும் திரண்டு வந்ததாய் நிறைய நினைவில் இருக்கிறது. அத்தனை சுருக்காய் குளித்திருக்கிறேன் பல நாட்கள்.

விரைவுக் குளியலில் இருக்கும் லாப நஷ்டங்களை அம்மாக்களை கேட்டால்தான் விளங்கும். சரியாய் எட்டு மணிக்கு முனிசிபாலிடிக்காரன் தண்ணீர் திறந்துவிடுவான். அதற்குள்ளாக வீட்டிலுள்ளோர் கடன்களை முடிதிருந்தால், குடங்கள் நிரம்பியதும் தொட்டியை நிரப்பலாம் என்பது அம்மாவின் கணக்கு. இப்படி நிமிடக்கணக்கில் குளித்தே பள்ளிப்பருவம் கழித்தேன், விடுமுறை நாட்களைத் தவிர. பாட்டி வீட்டில் வேறுவித பிரச்சனை. பின்புற கிணற்றடியில் குளியலறை என்று தனியான அமைப்பொன்றும் இருக்காது. ரோட்டுப் பக்கத்தை மறைக்க ஒரு தட்டிதான். மற்ற முன்று பக்கங்களுக்கும் மறைப்பு கிடையாது. அந்த செட்டியார் வீட்டு தீபா வேன்டுமென்றெ அவர்கள் வீட்டு கொள்ளைப்புறத்தில் வந்து திரிவதாகத் தோன்றும் எனக்கு. அவர்கள் வீட்டையும் பாட்டி வீட்டையும் பிரிப்பது சன்னமான முள்வேலி. நகரத்தில் வளர்ந்த எனக்கு வெட்கம் பிடுங்கித் திங்க, ஈரணித் துண்டோடு நின்று தண்ணீர் இரைத்துக் குளிக்க வேண்டும்.
சில சமயம் ஒடுகலாய் வாய்க்கால் போல் ஓடும் காவிரியில் நன்பர்களோடு குளித்ததும் உண்டு. அப்போது நீச்சல் தெரியாத நான் கழுத்தளவு நீரில் படித்துறையோடு நின்றுவிடுவேன். சில வால்கள் பாலத்திலிருந்து 'தொம்' என்று குதிப்பதோடு நிற்காமல் என்னை கிண்டல் வேறு செய்வார்கள். நான் காதில் விழாதபடி சோப்பு போட்டுக்கொள்வேன்.

திருகானை திருப்பியதும் முத்து முத்தாய் விழுந்த பூமாரியுடன் சிறுவயது வெந் நீர் குளியல் நினைவுகளும் கொட்டின. எரிவாயு அடுப்புகள் இல்லா சமயம். ரேஷன் மண்ணெண்ணெயில் சுடு நீர் வைப்பது தவறு என்கிற நியாயமான மத்தியதர வர்க்க எண்ணம் புரிபடாத வயது. நாங்கள் வசித்தது நிலத்தடி நீர் வசதிகள் இல்லாத வாடகை வீடு. மார்கழிக் குளிர். மனசு வெந் நீருக்கு ஏங்கும். 'பழகட்டும்' என்று சொல்லும் அம்மா ராட்ஷசியாய் தோன்றுவாள். எவ்வளவு வாதாடினாலும் 'இளம் சூடாய்' அன்றைக்கு வந்த தண்ணீர் குளிக்க கிடைக்காது. பால்யம் தாண்டி உடம்பை விரைப்பும் திமிரும் ஆட்கொண்ட பின் கற்கள் கூட்டி சுள்ளிகள் சேர்த்து சுடு நீர் வைக்கப் பழகினேன் குளிர் நாட்களில். நல்ல மார்கழிப் பனியில் இளம் சூட்டில் ஒரு வாளித் தண்ணீரையும் ஊற்றிக் குளிப்பதற்க்கு இணையேதும் உண்டா இவ்வுலகில்? அந்தக் கடைசிக் கோப்பை... வாளியை சுரண்டி நிரப்புகிற அரைக்கோப்பை... வெது வெதுப்பு என்றும் குளிச்சி என்றும் சொல்ல முடியாத அசட்டுச்சுகம்!

சுடு நீர் சகவாசம் அறவே அற்றுப் போனது... பழனியை விட்டு சென்னை வந்ததும்.

Thursday, August 14, 2003

இந்த இனையத்தமிழ் ரொம்பவும் மோசம்! சிறிய பிழை என்றாலும் 'தூ' 'தூ' என்று துப்பிவிடுகிறது. நான் சொல்ல வந்ததெல்லம் இதுதான்... ஆகஸ்டு 27ம் தேதி நம் பக்கத்து கோளான செவ்வாய் மிகவும் அண்டையில் வருகிறது. சுமார் 56 மில்லியன் கி.மீ தொலைவில்... ஆர்வம் உள்ளர்வள் இங்கு பார்க்கவும்.

Sunday, August 10, 2003

மதி,
நிச்சயமாக சொல்கிறேன்.நீங்களும், மாலனும், மற்றும் சுரதா யாழ்வாணன், முத்து நெடுமாறன், நா.கண்ணன், இன்னும் நான் அறியா எத்தனையோ கணிணித் துறையாளர்கள் எல்லோரும் இணையத் தமிழ் வரலாற்றில் மைல் கற்கள். இணையத்தமிழை மக்களிடம் எடுத்து வந்து தமிழ் சுவைக்கும் நல்லோர் எல்லோரையும், எப்படியேனும் வலையில் தமிழ் எழுதவைத்து பார்த்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் உங்களின் முயற்சி தமிழ் மொழியின் கிரீடத்தில் மற்றுமோர் ஜொலிக்கும் கல்.

தமிழில் எழுதுவது இன்னமும் கடினமாகத்தான் உள்ளது. ஆங்கிலம் எழுதுதல் போல் இலகுவாய் இல்லை. இப்போதுதான் கனடா மகேனின் ஏழு வருட இனையத்தமிழ் அனுபவத்தை படித்தேன். அத்தனையும் நிதர்சனமான உண்மை இன்றைக்கும்.

ஆனாலும் ஓர் ஆழமான நம்பிக்கை - மெல்லத் தமிழ் இனி வெல்லும்.

Thursday, August 07, 2003

பரிசல் - எனது தமிழ் தேடல். வலையில் காட்டாறாய் பாய்ந்து ஓடும் தமிழ் நதியில் எனது பயணம் இந்த பரிசல்.