<$BlogRSDUrl$>

Friday, October 31, 2003

காமிரா வாங்கலையோ காமிரா? 

காசி அவர்களின் NRI பற்றிய வலைக்குறிப்பு படித்தபின்பு நேற்று பெய்த H1-B, L1 மழையில் இன்று முளைத்த என்னைப்போன்ற NRIக் காளான்களின் விசித்திரச் செய்கைகள் சில மனதில் தோன்றின. அதைப்பற்றி எழுதியாக வேண்டியது என் 'ராஜ' கடமை(சொல்லுதவி :- கவி.வைரமுத்து). இதற்காக அவர்கள் என்னை அகில உலக புலம் பெயர் தமிழர் மகா சபையிலிருந்து தள்ளி வைத்தாலும் பரவாயில்லை.

மின்னணுச்சாதனங்களின் (குறிப்பாகப் படம் பிடி கருவிகள்) மீது எங்களுக்கு இருக்கும் காதல் சொல்லி மாளாது. தேவையோ இல்லையோ வாங்கி வீட்டில் அடுக்கிவிட வேண்டும். இல்லையேல் தமிழ் ஒன்றுசேரல்களில் தலைகுனிவே ஏற்படும்.

முதலில் வாங்குவது கையடக்கத் திரைப்படக்கருவி. Sony தான் மின்னணுச் சாதனங்களுக்கு எங்களின் ஆதர்ஷ புகலிடம். JVR, Panasonic மற்றும் Canon போன்ற மற்ற நிறுவனத் தயாரிப்புகள் சற்று மலிவாய்க் கிடைத்தாலும் ஏறெடுத்துக் கூட பார்த்துவிடமாட்டோமே நாங்கள். வலைப்பக்கங்களை அலசோ அலசென்று அலசி, அன்றைக்கு இருப்பதிலேயே விலை அதிகமான படப்பிடிப்பானை வாங்கவேண்டும். அதை வலை மூலமே வாங்கினால் வரிகள் கிடையாதென்பதால் மின்னட்டை எண்களைத் தட்டி ஆணைகளை அனுப்பிவிட்டு, தலைமேல் கிடக்கும் எல்லா வேலைகளையும் தூக்கி ஒரு மூலையில் கிடாசிவிட்டு, பக்கத்து 'சதுரங்களில்' (cube) ஒழுங்காய் வேலை செய்துகொண்டிருக்கும் சகாக்களிடம் காபித் தம்ளர் சகிதமாகப் போய் தான் வாங்கியிருக்கும் 'top of the line' படக்கருவியைப் பற்றி பீற்றிக்கொள்ளும் சுகம் இருக்கே... அட அட அட...

ம்... படம் பிடிப்புக்கருவி வாங்கியாகிற்று. படம் பிடிக்கத்தெரிய வேண்டாமோ? கற்றுக்கொண்டால் போச்சு. படம் பிடிக்கிறோம் என்று தெரிந்துவிட்டால் போதும் அந்நேரம் வரையில் உலக அரசியல் நிலவரங்களை அலசி ஆராய்ந்து ஓய்ந்த ஜாம்பவான்கள் ஒன்றும் பேசாமல் வழிவார்கள்! வேறு வழியின்றி தேமேயென்று நாமே... பேசி வைப்போம். சுற்றுலா செல்லும்போது மனைவியர் குழந்தைகுட்டிகளின் பால் புட்டி தள்ளுவண்டியோடு மாரடித்துக் கொண்டிருக்க, கணவான்களாகிய நாங்கள் பொறுப்பாக ஆடு, மாடு, கோழி, கழுதை, நடப்பன, பறப்பன - ஒன்றுவிடாமல் ஆவணப்படுத்திக் கொண்டிருப்போம். வீட்டுக்கு வந்து திரையிட்டுப் பார்த்தால், 'ஹாலிவுட்' தரத்திற்கு இருக்கும் என்று கட்டிய கற்பனைக்கோட்டைகள் தவிடுபொடியாகிவிட்டிருக்கும். ஒரே கூச்சலாயிருக்கும் அல்லது சத்தமேயில்லாத ஊமைப்படமாயிருக்கும். (சினிமாவில் எடிட்டிங் தொழில் புரிவோர் தெய்வங்களுக்குச் சமானம்). நடந்து கொண்டே எடுக்கப்பட்ட காட்சிகள் பார்க்கச் சகிக்காமல் நிலநடுக்கம் வந்தாற்போல ஆடியிருக்கும். இந்த அழகில் 'zoom-in-out' காட்சிகள் வேறு. கொஞ்ச நாள் ஆனதும் இவ்விளையாட்டு சலித்துப்போய் படக்கருவி பெட்டியில் முடங்கும். (அல்லது பையனைப் பார்க்கவரும் பெற்றோர் தலையில் கட்டப்படும் - அப்போது தானே புதிதாய் விற்பனைக்கு வந்திருக்கும் மின்னூடக திரைப்படக்கருவி வாங்கலாம்!)

அவ்வப்பொழுது ஊர் சுற்றிப்பார்க்க குழாமாகக் கிளம்பி வெளியூர் போய் வந்ததும், சில மாதங்கள் நமக்கு முன்னால் வந்துவிட்ட, விபரம் தெரிந்த நண்பர்கள் பெற்றோருக்கு நிழற்படங்களை 'ஒளிவரைவு' (scan) செய்தனுப்புகையில் மெலிதாய் தலையில் முளைக்கும் - பொறாமையின் கொம்புகள்! 'Single Lens Reflex' எனப்படும் 'ஒற்றை லென்சு வழி நோக்கும்' நிழற்படக்கருவிகளை வைத்திருக்கும் நண்ப நண்பிகள் 'SLR போல் வராது டிஜிடல்' (இந்தக் கதையை யார் கிளப்பியது எனத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள். வெட்டணும்!) என்றளக்கும் போது பொறாமைக்கொம்பு வேர்விட்டு வெளிக்கிளம்புவது இயல்புதானே? பெற்றோர், அவர்கள் சம்பளத்தில் கல்லூரியில் படிக்கையில் வாங்கித் தந்த 'சுட்டு-எடு-படக்கருவி' (point & shoot camera) ஈயமாக நம்முன் இளிக்கும். விட்டேனா பாரென்று அன்றைக்கே வலையில் மீண்டும் விழுந்து புரண்டு சில நூறு டாலர்களில் கிடைக்கும் Nikon-ஐயோ அல்லது canon-ஐயோ ஆணையிட்ட பின்புதான் அடங்குமந்த ஆசைத்தீ!!

இந்த 'top of the line' கொள்கையெல்லாம் SLR-க்கு செல்லுபடியாகாது. ஆயிரக்கணக்கில் செலவாகுமே! ஆக எங்களின் பணப்பைக்கு ஏற்றவாறு 'bottom of the line SLR'தான் கையில் தேறும். அதன் பயணர் புத்தகத்தைப் (User Manual) படித்து பட்டம் பெறுவதற்குள் வயதாகிவிடுமென்று உத்தேசித்து ஒரு வரி கூடப் படிக்காமல் அதை பத்திரமாக அலமாரியில் அட்டை போட்டு வைத்துவிட்டு, தானியங்கி நிலையில்(auto mode) வைத்தே காலத்தை ஓட்டுவோம். முதல் சுருளைப் பதிப்புச் செய்து பார்த்ததும் உலகமே கையிலடங்கி விட்டாற்போல மமதை தலைக்கேறும். இந்த இடைவெளியில் "SLR-படச்சுருள்-பதிப்புகள் பளிச்!பளிச்!" என்கிற இந்த SLR மாயமெல்லாம் மறைந்து 'மின்படக்கருவிகளின்' (Digital Camera)விலை தடாலென்று குறைந்து நல்ல தரமான மின்படக்கருவிகள் விற்பனைக்கும் வந்துவிடும். இப்போது மீண்டும் மின்படக்கருவிகள் வைத்திருப்பவர்களைக் கண்டால் கொம்பு முளைவிடும். கொஞ்ச நாள் கழித்து படச்சுருள் வாங்கி, கழுவி, பிரின்ட் செய்து மாளாமல் குறைந்த விலையில் ஏதாச்சும் மின் நிழற்படக்கருவி கிடைக்கிறதா என்று விரல்கள் வலை நோக்கி ஓடும்! அடுத்த விழாக்காலத் தள்ளுபடிக்காக காத்திருந்து 'நன்றியுரைக்கும் நாள'ன்று (Thanks Giving Day) என்றுமில்லாக் கோலமாய் விடியலுக்கு முன் எழுந்து Best Buy, Circuit City போன்ற கடைகளின் முன் கடைதிறப்பவனின் தரிசனத்திற்கு தவங்கிடப்போம். அங்கிருக்கும் விற்பனையாளர்கள் மின்-படக்கருவியுடன் ஒளி வரைவியன்றையும்(scanner) பதிப்பானொன்றையும்(printer) சேர்த்து தலையில் கட்டிவிடுவார்கள்.

இப்போது எங்களிடம் படம் பிடிக்க மட்டும் எத்தனை கருவிகள் தெரியுமா?

1. Point & Shoot Camera - just for its antique value!!

2. Di-8 Sony Cam Corder - Sent to India.

3. Digital Camcorder - kept safe in closet after few weeks of purchase.

4. Nikon SLR Camera - For "Clearest" possible picture on earth!

5. Nikon CoolPix 5000(Or whatever latest model available in the market) - For instant picture taking & sending via e-transport!

நல்ல வேளை, மறந்தே போயிருப்பேன் இதை-
6. Web Cam - for MSN Chat!!

இவை ஒன்றொன்றிற்கும் என்ன விலை என்று கூட்டிப் பார்த்தால் மயக்கம் வரும், எங்களுக்கே. எங்களின் இந்தியப் பெற்றோர்களின் இதய நலன் கருதி DVD, VCD வகையறாக்களைப் பட்டியலிடாமல் இங்கு விட்டுவிடுகிறேன்.


Wednesday, October 29, 2003

சூரியப்புள்ளிகள் - கேடுகளும் கவிதைகளும் 


சூரியனின் மேற்பரப்பில் தோன்றும் காந்தவிசைக் குவிவு சூரியப்புள்ளிகளாக உருவெடுக்கின்றன. சரியான தற்காப்புகளோடு பார்த்தால், தொலைநோக்கியிலோ வெற்றுக் கண்ணோலோ பார்க்க முடிகிற இந்தக் கரும்புள்ளிகள் நிஜமாகவே கரும் புள்ளிகள் அல்ல. மற்ற பரப்பைவிட சற்று சூடு குறைந்தவை. கதிரோனின் மேற்தகட்டின் வெப்பநிலை 5700 கெல்வின்(0 டிகிரி செல்சியஸ் = 273.15 கெல்வின்) என்றால் இந்தப் புள்ளிகள் 2000 டிகிரி கெல்வின்கள் அவ்வளவே!! இவற்றை தனியாகப் பார்க்க நேர்ந்தால் இவையும் வெகு பிரகாசமாகவேயிருக்கும். வெப்பமிகு சூரியத்தகட்டில் சற்று தணிவாயுள்ள பகுதிகள் கருமையாய்த் தெரிகின்றன. தெரிந்துவிட்டுப் போகட்டுமே எனக்கென்னவென்று நாம் இருக்கமுடியாது. இந்தப் புள்ளிகள் தேமே என்றிருக்காமல் நொடிக்கு 500கி.மீ வேகத்திலடிக்கும் சூரியக்காற்றை வானெங்கும் விசிறியடிக்கின்றன. இச்சூரியக்காற்று பூமியைத்தாண்டிச் செல்லும்போது நம் காந்தப்புலத்தை ஒரு கலக்கு கலக்கிவிட்டுப் போகின்றன. சூரியக்காற்றால் புவியின் காந்தப்புலம் அதிர்வுறுவதோடு, நம் அவ்வப்பொழுது அனுப்பிவைத்த சாட்டிலைட்டுகளின் உணர்விகளையும் வெகுவாகப் பாதிக்கின்றன. நம் தொலை தொடர்பு சாதனங்களும் மின்நிலைய கிரிட்களும் சூரியக் காற்றின் காந்தப்புயலால் தூண்டப்பட்டு மின்சேதமடைகின்றன.

பொதுவாக இந்தச் சூரியப்புள்ளிகள் 11 வருடச் சுழற்சியில் இயங்குகின்றன. சில வருடங்களுக்கு முன் இந்தச் சுழற்சியின் உச்சம்(solar maximum) நம்மைத் தாக்கிப்போனது.

சுழற்சியின் பின்-நீட்சியாகத் தோன்றியிருக்கும் சமீபத்திய புள்ளிகள் இன்னும் சில வாரங்கள் வரை நீடித்திருக்கும். அக்-22 ம் தேதி ஏற்பட்ட காந்தப்புயல் கடந்த வாரம் பூமியைத் தாக்கிற்று.

இதே போலவே 486 என்கிற புள்ளியிலிருந்து மாபெரும் சூரியப் பிழம்பு நேற்று வெடித்துச்சிதறியிருக்கிறது. இதன் காந்தக்கதிர்களும் புரோட்டானியப் பொழிவும் இன்று பூமியை வந்து சேரும். 1859ம் ஆண்டிற்குப் பிறகேற்பட்ட மாபெரும் ஒற்றை வெடிப்பு என வானியலாளர்கள் சொல்கிறார்கள். இந்தப் புள்ளியை X17 ரகப் படுத்துகிறார்கள். X - பெரியது என்பதையும், 17 என்ற எண் அதன் வலுவையும் குறிக்கிறதாம். இதன் தாக்கம் பூமியில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று சாட்டிலைட் தொடர்பு மையங்கள், மின் நிலையங்கள் எல்லாம் தயார்படுத்தப் பட்டுள்ளன. NASA விண்வெளி வீரர்களை இந்த நாட்களில் விண் நடப்பெதுவும் (space walk) செய்யாமல் இருக்கச் சொல்லியிருக்கிறது.


Becky Ramotowski என்பவர் தன் கொல்லைப்புறத்திலிருந்து டிஜிடல் கேமிரா, 80mm ஒளிவிலக்கு தொலைநோக்கி நல்லதொரு காப்புக் கண்ணாடி(solar filter) கொண்டு இவ்வெடிப்பைப் படம் பிடித்திருக்கிறார்.

"அறிவியல் போதும். வேற ஏதாச்சும் கவித்துவமா சொல்" என்னும் அழகியல் பிரியர்களுக்கு: சூரியப்புள்ளிகள் சேதம் மட்டும் தந்து போவதில்லை. சில காணக்கிடைக்கா அற்புதங்களையும் நிகழ்த்தும். வடகோளப்பகுதிகளில் வாழும் பேறு படைத்தோர் இதனால் உண்டாகும் 'அரோரா' எனப்படுகிற மின்,விண்,வண்ணஜாலத்தைக் கண்டுகளிக்கலாம்.

அக்-16 ல் பதிவுசெய்யப்பட்ட (க)வி(ந்)தை -


மேலும் கவிதைகளுக்கு, மன்னிக்க கட்டுரைகளுக்கு (அடிக்க வர்ராங்கோ வுடு ஜூட்): http://skyandtelescope.com/observing/objects/sun/article_1084_1.asp

Pictures credit: Space.com

Tuesday, October 28, 2003

பாய்ஸ் - பால் பாயாசம் 

ஏன் எல்லோரும் இப்படித் திட்டுகிறீர்கள்? ஞாநி முதற்கொண்டு யமுனா ராஜேந்திரன் வரையில் திண்ணையில் சவுக்கை எடுத்து விளாசித் தள்ளியிருக்கிறார்கள். 'பாய்ஸ்' படத்தில் எத்தனையோ நல்ல விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள் இளைஞர்களுக்கு.

1. விலைமாதை வீட்டிற்கு அழைத்து வந்தாலும் ஒன்றும் செய்யாமல் திருப்பி அனுப்பிவிடும் 'அப்பாவி' இளைஞர்களின் உள்ளத் தூய்மை.

2. வீட்டைத் துறந்து வீதிக்கு வந்து திருமணம் செய்து கொண்ட பின்னரும் முதலிரவன்று "படிக்கிற வயதில் பால் பவுடர், டையபர் என்று குழந்தைப் பேறு தேவையா?" என யோசித்து விலகும் பொறுப்புணர்வுள்ள பிரம்மச்சரியம்!

3. வாழ்க்கையில் முன்னுக்கு வர எதையும் செய் - ஐயப்பன் பாடல், வீதி நாடகப் பாடல், பாப் ஆல்பம் - எதையும் செய்; பணம் சம்பாதித்தலே முழுமுதற் கொள்கை என்னும் வாழ்வியல் பாடம்.

4. எங்கே தப்பித் தவறி தவறான பாதையில் போய்விடுவார்களோ என்று ஓட்டைப் பாத்திரத்தில் ஆய் கழுவும் ஜெயில் வாழ்வு பற்றிய POTA எச்சரிக்கைகள்.

5. SONY, CRICKET MATCH - இவைகளை நடத்தும் முதலாளிகள் தாம் நாளைய இளந்தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம். அவர்கள் காலில் விழு, கதறு, Please, Plaese என்று தன்மானம் துறந்து பிச்சை எடு என்னும் முற்போக்குத் தத்துவங்கள்.

6. நட்பு.

7. நட்புக்காக உயிர் தியாகம்.

8. நட்புக்காக விவாகரத்து.

9. "I Miss U" எழுதும் காதலுக்காக, ரேஷனில் வாங்கிய அரிசியை "Me too" வரைய ரோட்டில் கொட்டும் அரிசித் தியாகம். அதை பொறுக்கச் சொல்லும் "வில்லன்" அப்பா.

10. பெட்ரோல் பங்கில் மிச்சக் காசை வைத்துக் கொள்ளச் சொல்லும் பெற்றோரிடம் "எனக்குச் சம்பளம் தருகிறார்கள்" என்று திருப்பிக் கொடுக்கும் கண்ணியம், கட்டுப்பாடு.

11. காதலைத் துறந்து வாழ்க்கையை சரி செய்துகொண்ட அப்பா.

12. காதலியைக் கைப்பிடித்து வசதி இழந்த அப்பா.

13. இரண்டில் எது சரியென்று முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் இளைஞ-இளைஞிகளுக்கு 'கருத்து' சொல்லும் விவேக்.

14. காதலுக்காக எல்லாவற்றையும் இழந்து நின்றாலும், அமெரிக்கா ஓடிப் போன காதலியை நினைத்து உருகி, வாரம் தவறாமல் 'கில்மா'விடம் போகும் God Father விவேக்

15. ARR இசையுடன் "தமிழ்" கொஞ்சும் பாடல்கள்- உலகத் தரத்தில்.

16. சுஜாதா ரங்கராஜனின் சிந்தனையைத் தூண்டும் கூர்மையான ஆழமான வசனங்கள்.

17. கண்கவர் கிராபிக்ஸ் பிரமிப்புகள்.

18. 60 கேமிராக்களுடன் சங்கர் குழு.

- என்று எத்தனை 'நல்ல' விஷயங்கள் தெரியுமா?
இதையெல்லாம் பார்க்காமல் விட்டுவிட்டு, முதலில் வரும் பத்து பதினைந்து நிமிடக் காட்சிகளை மட்டும் திட்டுவது அபாண்டம். அவைகளெல்லாம் "ஊர்ல நடக்கிறவை". வாலிபப் பருவத்தின் 'இயல்பான' வெளிப்பாடு. பத்து பாத்திரம் தேய்க்கும் முனியம்மாவின் பையனும், ஹோட்டலில் சர்வர் வேலை பார்க்கும் முனிசாமியின் பையனும் கெட்டுப் போவது 'டிஸ்கவரி சேனலும், F டிவியும்" பார்த்துத் தான். மற்றபடி திரைப்படங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லவே இல்லை.

யார் என்ன சொன்னால் என்ன? என்னை பொறுத்தவரையில் "பாய்ஸ்" திரைப்படம் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சைகள் நிறைந்த அருமையான பால் பாயாசம். பாயாசக் கிண்ணத்தில் மலம் ஒட்டியிருந்தால் என்ன? துடைத்துவிட்டு சாப்பிடுங்கள். சுவையாக இருக்கும்.


Wednesday, October 22, 2003

எல்லைக்கோடுகள் - புவியியல் தந்த வரலாறு 

'வரலாறு புவியியல்' என்று நாம் இவ்விரண்டையும் சேர்த்தே படித்து வந்தாலும், இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்று என்றைக்கும் படித்தோமில்லை அல்லது உணர்ந்தோமில்லை. அது ஒரு பாடம், இது ஒரு பாடம். இரண்டிற்கும் வேறு வேறு வாத்தியார்கள். அதற்கைம்பது மதிப்பெண்கள், இதற்கைம்பது மதிப்பெண்கள். 'இருக்கிற டயத்தை பாதி பாதியா பிரிச்சுக்கோ, ஹிஸ்டரியிலேயே டயத்தை வெஸ்ட் பண்ணாதே' என்று பெற்றோர் தரும் தேர்வுக் குறிப்புகள். இவைதான் வரலாறு-புவியியல் இரண்டிற்கும் இடையேயான இயங்கியல் பற்றிய நம் அறிவு.

புவியியல் வரலாற்றில் மாபெரும் பங்காற்றியிருக்கிறது. சரித்திரம், பூகோளம் என்று பெரிய விஷயங்களுக்கு போகவேண்டாம். அடுத்த வீட்டுக்காரன் அரை அங்குலம் தள்ளிக் கட்டிய சுற்றுச் சுவர் பற்றிய கைகலப்பில் இருந்து ஆரம்பிக்கிறது நம் புவியியல் சார்ந்த வரலாற்றுப் பிரச்சனைகள். எல்லைகளைப் பெருக்கும் ஆவல் நம் ரத்தத்தில் கலந்து கிடக்கிறது. (மரபணு ஆய்வாளர்கள் அது எந்த மூலத்தொடரில் இருக்கிறது என்று பார்த்துச் சொன்னார்களென்றால் தேவலை.) செங்கிஸ்கானிலிருந்து புத்தம் புது சண்டியர் ஜார்ஜ் புஷ் வரைக்கும் எல்லோரும் தங்கள் ராஜாங்கத்தைப் பெருக்கிக் கொள்ளும் இப்போதைக்கு அடிமைதான். நேரம் கிடக்கும் போதெல்லாம் நாம் வலைக்குறிப்பு செய்வதுபோல அந்தக்காலத்தில் ராஜாக்கள் அரண்மனையில் பொழுது போகவில்லையென்றால் கத்தியைத்தூக்கிக்கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். எல்லையோரமிருக்கும் பிரதேசங்கள் எப்போதும் நாடு மாறியவண்ணம் இருந்தன. "இன்னிக்கி 'பழனி' பாண்டிய நாட்டிலா சேர நாட்டிலாப்பா?" என்று மக்களுக்கு எப்போதும் ஸ்டாக் மார்க்கெட் நிலவரம் போல குழப்பம் தான். எல்லைகள் வரைபவர்களுக்கும் இது தலையாய பிரச்சனையாய் இருந்தபடியால், தேனீரில் ரொட்டியை நனைத்துச் சுவைத்துக் கொண்டே ஜெனரல் McMohan போன்றோரும் அவர்களிச்சைக்கு ஏற்றாற்போல் ஏதேதோ கோடுகள் வரைந்து வைத்துவிட்டுப் போனார்கள். இந்தியா இதுவரைக்கும் போட்ட எல்லா சண்டைகளும்(ஒன்றைத்தவிர) எல்லைத் தகராறுகள் தாம். அவற்றை போர் என்று சொல்வது அபத்தம். போர் என்றால் என்னவென்றே நமக்குத் தெரியாது. கடலைப் பருப்பை வறுத்து வைத்துக் கொண்டு, அலங்கார உலகிலிருந்து தமிழ் திரைக்கு வந்து சதா 'ஜிங் ஜிங்' கென்று குதிக்கும் MTV ரக பெண் பிள்ளைகளை, சேனல் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டு, விளம்பர இடைவெளியில், ஈராக்கில் என்னாச்சு என்று CNN-ல் காண்பிக்கப்படும் பச்சை நிற வாணவேடிக்கையைப் பார்ப்பதோடு போர் பற்றிய நமது கவலை இனிதே முடிவுறுகிறது. சரி.. விஷயத்திற்கு வருவோம். சர்வ தேச நீதி மன்றத்தில் நிலுவையிலிருக்கும் அங்கீகரிக்கப் பட்ட எல்லைத்தகராறுகள் மட்டும் இன்றைக்கு நூற்றிற்கும் மேலாம்!

வெளிநாட்டில் வேலைக்கு வரும்வரையில் இந்தியா என்றால் என் மூளையில் தெரிந்தது, கிரீடம் போல் 'அமைப்பாய்' இருந்த காஷ்மீர் சேர்ந்த, முழு இந்திய வரைபடம் தான். இங்கு வந்ததும் மொட்டை இந்தியாவை பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. தேசப் பற்றுள்ள நிறையப் புலம் பெயர்ந்த புதியவர்கள் வெகுண்டெழுந்து, ஆசாத் காஷ்மீரை மீட்டுவிடலாம் என்று e-புரட்சிகள்(!) செய்ய மின்னஞ்சல்கள் அடித்துக்கொண்டு அயர்ந்துபோவது இயல்பே. ஆனால் இந்திய வரைபடப் பதிப்பாளர்கள் இன்னும் தூக்கத்தில் இருந்து விழிக்கவில்லை. இன்னும் பத்தாண்டுகள் பிடிக்கும் தூக்கம் கலைய. அதுவரை நம் பிள்ளைகளுக்கு சிவாஜிகணேசன் போல் சிகையலங்காரம் கொண்ட இந்திய வரைபடம் தான்.

எல்லைக் கோடுகள் வெறும் கோடுகளல்ல. அவற்றிற்கு முப்பரிமாணம் உண்டு. தரையில் ஒரு கோடு கிழித்து விட்டால் போதும். கடல், ஆகாயம், பூமி எல்லாம் நமக்கு சொந்தம். உங்கள் நாட்டின் ஒரு பக்கம் கடல் இருந்தால் தரையிலிருந்து 12 மைல் தூரம் மற்றும் 200 மைல் ஆழம் வரை உள்ள கடல் உங்களுக்கு சொந்தம். என்னவொரு விந்தை! இவைகளையெல்லாம் சொந்தம் கொண்டாட நாம் யார்? (ஆனாலும் நான் வைத்த நெல்லிக்காய் மரம் அடுத்த வீட்டில் காய்த்துக் கொட்டினால் மனம் ஒப்பமாட்டேன்கிறதே ஏன்?) 200 மைலுக்கு கீழே உள்ள கடல் யாருக்கு சொந்தம் என்பதில் மீண்டும் பிரச்சனை. மூன்றாம் உலக நாடுகளும், பூமிப் பந்தின் புதிய எஜமானர்களும் மல்லுக்கு நிற்கிறார்கள். கடல் சரி, வானம்? யார் உயரப் பறக்கிறார்களோ அவர்களுக்கு. ஆப்கன் சண்டையில் பீரங்கிகளுக்கு அப்பால் பறந்த ஒற்றர் விமானங்கள் ஞாபகம் இருக்கா?

சரித்திரத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் புவியியல் இரண்டற கலந்து கிடக்கிறது. அழித்தழித்து வரையப்படும் இக்கோடுகளால் நாம் இழந்தவற்றை சொல்லி மாளாது. ஒரு மாபெரும் நாட்டில் ஒரு ஆகஸ்டு மாதத்தில் அந்த குறிப்பிட்ட வாரத்தில் மட்டும் பஞ்சாபை விட்டு ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் மேற்கு நோக்கி ஓடி எல்லை கடந்தனர். கோட்டின் இருபக்கமும் 75,000 மாதர்கள் கடத்தப்பட்டு, கற்பழிக்கப் பட்டனர். குறைந்த பட்சம் பத்து இலட்சம் பேர் அந்தக் கோட்டின் இரண்டு பக்கமும் கொல்லப் பட்டனர். எந்தக் கோடு எந்த நாடென்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இன்றும் தொடர்கிறது அச்சரித்திரத் தவறின் துயர ரேகை.

மேற்சொன்னது புவியியல் நிகழ்த்திய சரித்திரத்தின் ஒரு சின்ன உதாரணம். இதுபோன்று இன்றும் ஆயிரக்கணக்கான சோகங்கள் நித்தம் நடந்து கொண்டிருக்கின்றன.

மீண்டும் 'மூதாய்' புத்தகத்திலிருந்து சில முத்தாய்ப்பு வார்த்தைகள்:

கி.பி. 1500களில், மிங் வம்சத்தினரால் சீனப் பெருஞ்சுவர் எழுப்பப் பட்டது. எதிரிகளை சீன எல்லைக்கு அப்பால் நிறுத்துவதற்காக கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவர் இன்று, தனது பழைய அர்த்தத்தை இழந்து, டூரிஸ்ட்டுகளை கவர்ந்திழுத்து, அன்னிய செலாவணியை தருவிக்கும் காட்சிப்பொருளாக மாறி நிற்கிறது. உலகெங்கும் தேசங்களுக்கு இடையே எழும்பி நிற்கும் எல்லா சுவர்களுக்கும், வேலிகளுக்கும் என்றேனும் ஒரு நாள் இக்கதி தான்.

Sunday, October 19, 2003

நம் மூளையில் அவர்கள் வரைந்த அந்தப்படம்... 

என் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் நூலகத்தில் ஒரு உலகப்படம் மாட்டி வைத்திருந்தார்கள். அது சற்று வித்தியாசமானது. ரெகுலர் அக் மார்க் உலகப் படம் இல்லை. எனக்கு பார்க்கவே பிடிக்கவில்லை.

இது மாதிரியிருந்தது அந்தப் படம்.


வீட்டிற்கு வந்து ஆசுவாசமாக யோசித்த போது நாம் எத்தனைத்தூரம் சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்பது புரிந்தது. உலகம் உருண்டை. அதை எப்படிவேண்டுமென்றாலும் பார்க்கலாமே! எந்தப் பக்கம் இருந்து கடித்தாலும் லட்டு லட்டுத்தானே?

"மூதாய்" என்கிற புத்தகத்தில்(வாசல் பதிப்பகம், 40-D/3, முதல் தெரு, வசந்த நகர், மதுரை) இந்த விஷயம் குறித்து ச.தமிழ்செலவன் அழகாக எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையிலிருந்து சில...

இது வரை நாம் பார்த்து வரும் உலகபடம் ஐரோப்பியர்கள் நமக்குக் காட்டிய படம் தான்.

உலகப்படம் என்றால் இப்படித்தான் இருந்தாக் வேண்டுமா? இடது ஓரத்தில் அமெரிக்கக கண்டங்களும் வலது ஒரத்தில் ஜப்பான், ஆஸ்திரேலியா என? பூமி உருண்டையாக இருக்கிற போது எந்தக் கோணத்தில் இருந்தும் பூமியைப் பார்க்கலாமே.

ஆனால் உலகின் மையப் புள்ளி தாங்கள் தான் என்கிற ஐரோப்பியத் திமிரின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இதுவரை நமக்குக் காட்டப்பட்டு வரும் உலகப்படம் ஆகும். தீர்க்க ரேகை கிரீன்விச்(இங்கிலாந்து) நகரின் வழியே செலவதால் இங்கிலாந்து உலகத்தின் மையமாக இருப்பது தவிர்க்க முடியாதல்லவா என்று நாம் அப்பாவித்தனமாக நம்புகிறோம்.

கிரீன்விச் வழியாக 0 டிகிரி தீர்க்க ரேகை (தென்வடலாக) செல்கிற மாதிரி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தானாக வரைந்து கொண்டது. யாரிடம் கேட்டு வரைந்து கொண்டது? பாரிஸ் வழியாக செல்வதுதான் 0டிகிரி தீர்க்கரேகை என்று பிரெஞ்சு ஏகாதிபத்தியம் கூறியது. கொங்ச நாள் இரண்டு ரேகைகள் இருந்தன. பிறகு இரண்டு அண்ணன்மாரும் ஒரு சமரசத்திற்கு வந்து கொண்டனர். கிரீன்விச் வழியாகச் செலவதே 0 டிகிரி தீர்க்கரேகை என வைத்துக்கொள்வோம். ஆனால் நீட்டல் அளவையில் பாரிஸ் வழியே செல்லும் அட்சரேகைகளில் ஒரு டிகிரி வித்தியாசத்தில் செல்லும் ரேகைகளின் இடையே உள்ள தூரம் தான் ஒரு மீட்டர் என்பதை உலகம் ஒப்புக்கொள்ள வேண்டும். உலகம் ஒப்புக் கொள்வது என்ன? நாட்டமைகள் போட்ட சட்டங்களை யார் கேள்வி கேட்பது? இரண்டும் அமுல ஆகிவிட்டன. இந்தியாவில் உஜ்ஜயினி நகரின் வழியாகத்தான் 10 டிகிரி தீர்க்கரேகை செல்வதாக வெகுகாலமாக ஒரு நம்பிக்கை இருந்தது. ஏன் 0 டிகிரி ரேகை சென்னை வழியாகவோ, பெய்ஜிங் வழியாகவோ, எட்டயபுரம் வழியாகவோ போகச்சொன்னால் போகாதா? கற்பனை ரேகை தானே?

எனவே நம் மூளையில் அவர்கள் வரைந்துள்ள வசத்தில் தான் உலகைக் காணவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும் என்று கட்டாயமில்லை.

சரியான அளவிலான உலகப் படம்


Wednesday, October 15, 2003

"மாயக் கண்ணாடியே! மாபெரும் சண்டியர் யாரென்று காட்டு!" 

இங்கே தொடர்வது அமெரிக்க ஐக்கிய மாகாணம் நிகழ்த்தி வரும் சண்டியர் ராஜாங்கத்தின் வரலாற்றுப் பதிவுகள் - தொடரும் அதன் எதேச்சதிகாரப் போக்குகளில் சில.

26. கட்டார்(Qatar) நாட்டின் டோஹா(Doha) நகரில் நவம்பர் 2001ல் WTO நடத்திய அமைச்சர்களின் மாநாட்டில், எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில், அத்தியாவசிய மருந்துகளின் விலையை எட்டாக்கனியாக வைத்திருக்கும் காப்புரிமைச் சட்டங்களைத் தளர்த்தலாமென்ற தீர்மானத்திற்கு அ.ஐ.மா தவிர மற்ற 146 நாடுகளும் ஒரு சேரச் சம்மதித்தன. டிசம்பர் 2001ல் அ.ஐ.மா. தனியாளாக நின்று ஒப்பந்தத்தை சிதைத்து விட்டது. ஜெனிவா வட்டாரங்களிலிருந்து அடிபடும் சேதி - அ.ஐ.மாகாண மருந்துக் கம்பெனிகளின் திரைமறைவு செய்கைகளைட் தொடர்ந்து, அ.ஐ.மாவின் முடிவு, நேரடியாக வெள்ளை மாளிகையிலிருந்தே வந்ததாம்.

21. குழந்தைகளின் உரிமைகளுக்கான தீர்மானம் 1989. - பாலகர்களுக்கான சமூக பொருளாதார உரிமைகளைப் பேணும் இத்தீர்மானத்தில் ஐ.மா கையெழுத்திட்டாலும், அதிகாரப் பூர்வமாக்கவில்லை(signed but not ratified). இவ்வாறு அதிகாரப் பூர்வமாக்காத இன்னொரு நாடு சோமாலியா (மட்டுமே).

20. பெண்களுக்கு எதிரான அனைத்து வகை பாகுபாடுகளுக்காக 1979ல் அமைக்கப் பட்ட தீர்மானம். - 169 நாடுகளால் அதிகாரப் பூர்வமாக்கப் பட்டது. ஐ.மா.வின் அதிபர் ஜிம்மி கார்ட்டர் கையெழுத்திட்ட போதும். செனட் சபை அதற்கு தடை விதித்தது. இத்தீர்மானத்தை அதிகாரப் பூர்வமாக்காத சில நாடுகள்: அ.ஐ.மா, ஆப்கானிஸ்தான், சாவ் டோம்(Sao Tome) மற்றும் பிரின்சிபி(Principe).

5. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கான(ICC) ஒப்புமை 1998. - மானுடத்தின் மீதிழைக்கப்பட்ட மற்றும் போர் குற்றங்கள் புரிந்த அரசியல், ராணுவ அதிகாரிகளைத் தண்டிக்கும் இந்த மன்றத்தை உருவாக்க அழைக்கப்பட்ட மாநாடு, ஜீலை 98ல் ரோம் நகரில் முடிவு பெற்ற போது, 120 நாடுகள் கையெழுத்திட்டன. அதிபர் கிளிண்டன் டிசம்பர் 2000ல் கையெழுத்திட்ட போதும், சீனம், இஸ்ரேல், ரஷ்யா உட்பட ஆறு டாடுகளோடு சேர்ந்து அ.ஐ.மாகாணமும் இதை எதிர்ப்பதாக சொன்னார். மே 220ல் ஜார்ஜ் புஷ் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒப்பந்த்த்திலிருந்து கையப்பத்தை 'திரும்பப் பெறுவதாக'(unsigning) அறிவித்தார். பன்னாட்டு நீதிமன்றத்தின் சட்ட வரம்புகளை அங்கீகரிக்க இயலாது எனவும் எந்தவொரு தனிநபருக்கும் எதிரான வழக்குகளுக்குத் தேவையான விபரங்களைக் கொடுத்து உதவப் போவதில்லை எனவும் தெரிவித்தார். ஜூலை 2002ல் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட 60க்கும் மேலான நாடுகள் உளப்பூர்வ ஒப்புதலளித்ததனால் சர்வதேச நீதிமன்றம் அதிகாரத்திற்கு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், அ.ஐ.மா. தங்கள் நாட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல் இருக்க, பல்வேறு நாடுகளுடன் தனிப்பட்ட முறையில் பேரம் பேசியது. இதுவரையில் 37 பரஸ்பர தற்காப்புப் பேரங்களில் வெற்றியும் பெற்றுவிட்டது. இந்தப் பேரங்கள் யாவும் ஆசிய, ஆப்பிரிக்க, கிழக்கு ஐரோப்பிய நலிந்த குட்டி நாடுகளோடு நிகழ்ந்தவைதாம். 73 மில்லியன் டாலர் பண உதவியைக் குறைத்து விடுவதாக மிரட்டி போஸ்னியாவை இந்த பேரத்தில் கையெழுத்திட வைத்தது. இந்த பேரத்திற்கு சம்மதிக்காத 35 நாடுகளுக்கு ஜூலை 2003ல் புஷ் அரசு எல்லாவித ராணுவ உதவிகளையும் நிறுத்தி விட்டது.

4. எல்லை தாண்டும் குற்றாயுத(small arms) போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் ஐ.நா. ஒப்பந்தம் 2001. - இதை எதிர்க்கும் ஒரே நாடு அ.ஐ.மா. மட்டும்தான். இணைச்செயலர் போல்டன் ஒப்பந்த்த்தைப் பற்றிக் கூறுகையில், "பன்னாட்டு சமூகத்திற்கு இது அத்தியாவசியமான எத்தனிப்பு", ஆனால் ஐ.மா. "எந்நாளும் ஒப்புக் கொள்ளவும் இயலாது, ஒப்புக் கொள்ள மாட்டாது" (!!?!) என்று அருளியிருக்கிறார். ஏனெனில் அவர்கள் ஆயுதம் வைத்துக் கொள்ளும் அரசியல் சட்ட உரிமையைக் குலைப்பதாக ஆகிவிடுமாம்.

2. கண்டம் தாவும் ஏவுகணை ஒப்பந்தம் 1972. - அ.ஐ.மாகாணம் டிசம்பர் 2001ல் வரலாற்றுச் சிறப்புள்ள இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டது.

1. ஒட்டு மொத்த அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் 1996. - பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ரஷ்யா உட்பட 89 நாடுகளால் அதிகாரப் பூர்வமாக்கப்பட்டு 164 நாடுகள் கையப்பமிட்ட இந்த ஒப்பந்தம், 1996-ல் கிளிண்டனால் கையெழுத்திடப்பட்டாலும், 1999-ல் மீண்டும் செனட்டால் கைவிடப்பட்டது. அணு ஆயுதங்கள் உற்பத்தியையும் மற்றும் அணுச் சக்தி கொள்கையையும் கைவிடாமல் நிகழ்த்திவரும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத 13 நாடுகளில் அ.ஐ.மாகாணமும் ஒன்று.

# நன்றி - 'Z' Magazineஇதை வலையிலிடும் போது சுடச்சுட இன்று வந்த செய்தி - இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனையை ஆப்பிரிக்க அபார்தீட் காலத்திற்கு இழுத்துச் செல்லும்வண்ணம், வெஸ்ட் பாங்க் நெடுக பாலஸ்தீன் - இஸ்ரேல் மக்களை நிரந்தரமாகப் பிரிக்கும், முள்கம்பிகள் வைத்து யூத ஆக்கிரமிப்புக்கு பங்கம் விழைக்காமல் வலைத்து வலைத்து எழுப்பப்படும் மதிற்சுவரை நிறுத்தக் கோரி ஐநா பாதுகாப்புச் சபை இன்று கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை(veto) கொடுத்திருக்கிறது அமெரிக்க ஐக்கிய மாகாணம்.
Monday, October 13, 2003

எல்லாமே பெரிசுதான்! ஐக்கிய மாகாணத்துக்காரர்களுக்கு எல்லாமே கொஞ்சம் பெரிசாக இருந்தால் தான் பிடிக்கிறது.

இங்கு வந்த புதிதில் பர்கரைக் கண்டு மலைத்துப் போனேன். ஒரு நடுத்தர(medium) பர்கரை வாங்கி வாய்க்குள் திணிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்.

பர்கர் சாப்பிடுவதை martial arts-ல் சேர்க்கவேண்டும் என்பது என் நெடு நாளைய கோரிக்கை. இல்லையா பின்ன - 11/2 இன்ச் தடிமனும் அரையடி நீளமும் இருக்கும் 'patty' என்று செல்லமாக அழைக்கப்படும் கறித்துண்டை அதைவிட தடிமனாகவும் (பழைய ஸ்டாக்காக இருந்தால் கெட்டியாகவும் வரட்சியாகவும்) இருக்கும் பாதி ரொட்டியின் மேல் வைத்து, பாலடைக் கட்டியின் ரெண்டு துண்டுகளைப் பரப்பி, வட்டமாக வெட்டப்பட்டிருக்கும் தக்காளி ஒரு துண்டு, சிறிது வெங்காயம், நம் முட்டைகோஸ் ரகத்தைச் சேர்ந்த 'லெட்டூஸையும்', இன்னபிற காய் வகைகளை லேசாக எண்ணெயில் வாட்டியோ வாட்டாமலோ இட்டு, அதன் மேல் கொஞ்சம் 'மயானீஸ்' என்கிற களிமத்தைக் கொட்டி, மிச்சமிருக்கும் பாதி காய்ந்த ரொட்டியை கவிழ்த்து பேப்பரில் சுற்றி ஒரு கொழுத்த 'பெருச்சாளி' ரேன்சுக்கு தரும் பர்கரை...(உ·ப்ப்ப்! இருங்க கொஞ்சம் மூச்சுவிட்டுக்கறேன்!).. முழிகள் வெளிவர, கிழிந்துவிடும் அளவுக்கு வாயைப்பிளந்து திணித்து திணித்து, வூடு கட்டி அடிப்பது Martial Arts-ஆ இல்லையா? நீங்களே சொல்லுங்கள்? 'மயானீஸ்' பிதுங்கி கை கால் மூக்கில் ஈஷிக்கொள்ளாமல், லெட்டூஸ் சிதறி விழாமல், ஒவ்வோர் கடிக்கும் நைஸாக சைடில் இந்தப் பக்கம் ஜகா வாங்கும் கறித்துண்டம் ரொட்டியைவிட்டு நழுவி மேசையை நாசம் செய்வதற்கு முன்பு சரிக்கட்டி சாப்பிடும் அழகை நுண்கலைப் பிரிவிலும் சேர்க்கலாம்.

எனக்கு அடுத்த மலைப்பு காத்திருந்தது காய்கறி மார்க்கெட்டில். நம்ம ஊர் காய்கறிகள் அ.ஐ.மா சந்தைகளுக்கு வந்தால் WWF ரிங்கிற்குள் வந்தாற்போல நடுங்கிப் போய்விடும்கள். கத்திரிக்காய் ஒவ்வொன்றும் சுரக்காய் சைஸிலும் beef steak தக்காளிகள் குட்டி பூசணி போன்றும் இருக்கின்றன. வார, மாத பத்திரிக்கைகளிலும், தபாலிலும் வரும் தள்ளுபடிச் சீட்டுக்களைச் குருவி போல சேகரித்து, வாரா வாரம் அங்காடிகளில் கொடுத்து எல்லாப் பொருட்களையும் ஒவ்வொருத்தரும் மலை மலையாய் வாங்கி குவிக்கிறார்கள். இந்தக் கூப்பன்களில் பயன்பெற வேண்டுமானால் இப்படித்தான் தேவைக்கதிகமாய் வாங்கிக் குவிக்க வேணும். (எப்படித்தான் ஒரு வாரத்திற்குள் அத்தனை பொருட்களையும் திண்று தீர்ப்பார்களோ என மலைப்பாய் இருக்கிறது). நாங்கள் அப்பாவியாக ஒரே ஒரு பால் குப்பியும், சில காய்கறிகளையும் பொறுக்கி எங்களின் இரு பக்கத்திலும் நிரம்பி வழியும் தள்ளுவண்டிகளின் நெறிசலில் பூச்சியாக நின்றிருப்போம்.

சீனர்கள், ஜப்பானியர்கள், இந்திய-பாகிஸ்தானிய-இலங்கை நண்பர்கள் தவிர்த்து மற்றெல்லாம் சராசரியாக தடிமனாய் வளர்த்தியாய் தொப்பையோடு இருக்கிறார்கள். என்னைப் போன்று சின்ன உருவங்களுக்கு பையன்களின் பிரிவில் தான் சட்டைகள் கிடைக்கின்றன. அட stapler கூட சின்னதாய் அழகாக இல்லையென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். குண்டாந்தடி போல வைத்திருக்கிறார்கள். அனில், காக்கா எல்லாம் இவர்கள் தின்றுபோடும் சீஸ் பர்கர்களை சாப்பிட்டு கொழுத்துப் போயிருக்கின்றன.

அ.ஐ.மா.இல் டீக்கடை காண்பதறிது. எல்லாம் காபிக் கடைகள் தாம். எங்கள் பக்கத்தில் குஜராத்திக் காரர்களால் நடத்தப்படும் அந்த காபிக் கடை தொடருக்குப் பெயர் 'Dunkin Donuts'. மலிவு விலையில் இங்கு கிடைக்கும் காபி ஏறக்குறைய நம்மூர் டிகிரி காபியை ஒத்திருப்பதால் (ஆனால் அவர்கள் ஊற்றும் கிரீமர்(creamer) சற்றுநேரம் கழித்து அடிநாக்கில் புளிக்கும் என்பதை அடியேன் இங்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்!!) நேரம் கிடைக்கும் போது அங்கு போவது வழக்கம். உள்ளூர்காரர்கள் பருகும் சராசரி அளவு 'tall'. சரவண பவனில் கிடைக்கும் 'டவரா' காபியைப் போன்று குறைந்தது ஆறேழு மடங்குகள் பிடிக்கும் அந்த 'tall' கோப்பை! அலுவலக உண்டிச்சாலையில் கூட காலையில் பலர் பெரிய கூஜாக்களைத் தூக்கித் திரிவதை காணலாம். நான் மட்டும் தக்கினூண்டு டம்ளரில் காபி பிடித்துக் கொண்டிருப்பதை பக்கத்திலிருப்பவர்கள் ஏளனமாகப் பார்க்கிறார்கள்! புள்ளிவிபரம் - போன வருடம் மட்டும் 18.7 மில்லியன் பைகள் இறக்குமதி(இறக்குமதியில் முதலிடம்) செய்திருக்கிறார்களாம். இப்படி வாளி வாளியாக காபி குடித்தால்?


வாகனங்களில் யாம் எப்போது கண்டாலும் மிரண்டுபோவது மெகா ட்ரக்குகளைப் பார்த்து. பென்சில்வேனியாவில் ரோடுகள் வேறு சரியில்லையா? ஒரே பேஜார் போங்கள். பல இடங்களில் ரெண்டே ரெண்டு லேன் போட்டு வைத்திருக்கிறார்கள். 55 மைல் அதிகபட்சமாயிருந்தாலும் 65-75 மைல் வேகத்தில் இடதுகோடி லேனில் (பெரும்பாலும் ட்ரக்குகள் வலக்கோடியில் போகவேண்டும் என்பது விதி) அரக்கர்கள் போல போய்க்கொண்டிருக்கும் அவைகளை கடந்து செல்வதற்குள் வேர்த்து விறுவிறுத்து நுரை தள்ளிவிடும், விரைவுச்சாலையில் ஓட்டப்பழகும் வரையில். நமக்கு வேகம் சற்று அலர்ஜியென்பது அவர்களுக்கு தெரிந்ததோ, கதை கந்தல்தான் - உங்களை பின்னாலிருந்து முட்டாத குறையாக நெருக்குவார்கள். இந்த விளையாட்டுப் பழக குறைந்தது இரண்டு வருடங்கள் பிடித்தது. ஹி.. ஹி... இப்பகூட நமக்கு ட்ரக்குகள் என்றால் கொஞ்சம் கிலிதான்.

Wednesday, October 08, 2003

பாப்லோ நெருடா (Pablo Neruda)

1971-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் பாப்லோ நெருடா. 1904-ம் வருடம் சிலி நாட்டில் பிறந்த இவரின் கவிதைகள் தென் அமெரிக்க கண்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கின. கவிதை உலகிற்கு இவர் தந்த பங்களிப்பு அளப்பறியது. மீண்டும் மீண்டும் பிரசுரமான "Obras Completas" என்னும் அவரது படைப்புகளின் தொகுப்பு 1968ம் வருடம் 3,237 பக்கங்களைக் கொண்ட இரண்டு புத்தகங்களாக வெளியிடப்பட்டதாம்.

அவரைப்பற்றி நோபல் தளம் சொல்வனவற்றை இங்கு படித்துப் பாருங்கள்: http://www.nobel.se/literature/laureates/1971/neruda-bio.html

கவிதை பற்றிய அவரது கவிதை ஒன்றை இங்கு மொழியாக்கம் செய்திருக்கிறேன்.

கவிதை
******

கவிதை வந்தது
என்னைத்தேடி.
எங்கிருந்து?
ஒரு நதியிலிருந்தா?
அன்றி வாடைக்காலத்திலிருந்தா?
எப்படியென்றும் எப்போதென்றும் கூட
எனக்குத் தெரியாது
எந்தச் சத்தமும் இல்லை,
வார்த்தைகளுமில்லை
மௌனமும் அங்கில்லை
ஆனால்
எனக்கென விதிக்கப்பட்ட வீதியிலிருந்து,
இரவின் கிளைகளிலிருந்து,
முன்னேற்பாடுகளின்றி எல்லாவற்றிலிருந்தும்,
ஆவேசமான பிழம்புகளிலிருந்தும்
மீண்டுகொண்டிருந்தது, தனியாக
முகமற்று இருந்த என்னை
தீண்டிச் சென்றது.

என் சொல?யானறியேன்.
உச்சரிப்புகள் அறியாததிருந்தன
என் உதடுகள்.
நான் குருடனாயிருந்தேன்.
என் ஆன்மாவை ஏதோ
இருக்கமாய் தொற்றிக் கொண்டது
பெருங்காய்ச்சலோ,
அல்லது மறந்து விட்ட சிறகுகளோ.
(அக்)கனல் பற்றி நடந்தேன்.
தீனமான
அந்த முதல் வரி எழுதினேன்.
தீனமான, அர்த்தங்களற்ற,
சுத்தப் பிதற்றலான,
ஒன்றுமறியாதவனின்
ஆத்ம ஞானத்தை மட்டும் பெற்ற
அந்த முதல் வரியை எழுதினேன்.

சட்டென விரிந்தது பார்வை.
தளைகளை விடுத்துத்
திறந்து கொண்டது வெளி
தன்னைச் சுருட்டிக் கொண்டது இருட்டு.
பிரபஞ்சம் புலர்ந்தது.
கிரகங்களும் சுழன்றன.
அவைகளின் மீளாத் துடிப்பும்.
படர்ந்த நிழல் கிழிந்தது
அம்புகளும்,
பூக்களும்,
சுவாலையும் பட்டு.

நான்,
அற்பனாய்,
எல்லைகளற்ற நட்சத்திரங்களின்
அரூவத்தில்,
ஒருமையில்,
மாயத்தில் போதையுற்று,
சூன்யத்தில் ஒருவனாய்,
விண்மீன்களோடு கதியற்றுச் சுழன்றேன்.
என் இதயம்
உடைந்து திறந்து கொண்டது.


Friday, October 03, 2003

காந்தி பற்றி...

காந்திக்கும் எனக்கும் இடையே காட்டம் மிக இருந்தாலும் அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று சிக்கனம். அவரின் உடையைப் பார்த்து இதைச் சொல்லவில்லை:)). பேச்சுக்காக என்றால்லாம் இல்லாமல் சிக்கனத்தை வாழ் நாள் முழுதும் கடைபிடித்தார்.

கடிதம் எழுதும் போது கூட சிறு இடத்தையும் வீண் செய்யமாட்டாராம். கவரின் உள் பக்கங்களிலும் விடாமல் எழுதுவாராம்.

காந்தியின் பென்சில் பற்றி ஆங்கில பாட புத்தகத்தில் படித்தது அறைகுறையாக நினைவில் இருந்தது. அதன் தலைப்பு 'Gandhiji's Little Pencil'. ஒருவழியாக கூகிலிட்டு கண்டுபிடித்துவிட்டேன்.

காந்தியின் பேரன் அருண் காந்தி பள்ளியிலிருந்து வரும் வழியில் தன்னிடமிருந்த உழக்களவு பென்சிலைக்கண்டு வெகுண்டு புதரில் கிடாசிவிட்டார், தாத்தாவிடம் சொல்லி நல்ல பென்சில் வாங்கிக்கொள்ளலாமென்று. நடந்ததோ வேறு. கையில் டார்ச்சைக் கொடுத்து "போய்த்தேடிக் கொண்டுவா" என அனுப்பினாராம் மகாத்மா! சிறுவனான அருண் தாத்தாவின் மேல் ஏகக் கடுப்பாகி வேறு வழியேதுமின்றி மூன்றுமணி போராடி கடைசியில் பென்சிலைக் கொணர்ந்தாராம்.

அன்றிரவு தன் பேரனுக்கு இரண்டு முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுத்தாராம் காந்தித் தாத்தா.

பாடம் 1: பென்சில் போன்ற சிறு பொருட்களைத் தயாரிக்கவும் ஏராளமான இயற்கை வளங்களை நாம் அழிக்கிறோம். இப்படி இயற்கை வளங்களை முழுதும் பயன்படுத்தாமல் தூக்கியெரிவதால் இயற்கைக்கு எதிரான வன்முறையைச் செய்கிறோம்.

பாடம் 2: வசதியும் வாய்ப்பும் அமைந்தவர்கள் வளங்களை தேவைக்கதிகமாக அழிப்பதால், வசதியற்றோர் உலகின் இன்னொரு மூளையில் தேவையானவை கிடைக்காமல் அல்லல்படுகின்றனர். ஆகவே இது மனித சமூகத்தின் மீது நாம் தொடுக்கும் வன்முறையாகவும் ஆகிறது.

என்ன அழகான சிந்தனைகள்!

இதை எழுதும் போது ஞாபகம் வந்து தொலைத்தது - ஐக்கிய மாகாணத்துக்(US)காரர்கள் ஒரு நாளக்கு தங்கள் வீட்டு புல்வெளியைப் பராமரிக்க ஆகும் தண்ணீரைக் கொண்டு உலகிலுள்ள அனைவரும் - ஆமாம் அனைவரும் - ஒரு வாரத்துக்கு குளிக்கலாமாம்!!!


Thursday, October 02, 2003

எண்ணங்களைப் பற்றிச் சில எண்ணங்கள்
'கபாபுஸ¤குனிஷ்ஞூ' பற்றித் தெரியுமா? என்னங்க, இது கூட தெரியாமல் வலைப்பக்கம் வந்துட்டீங்க? நல்லா நாலுமுறை திரும்பத் திரும்ப படித்துப் பாருங்க. 'க..பா..பு..ஸ¤..கு..னி..ஷ்..ஞூ' , கபாபு ஸ¤ குனிஷ்ஞூ, கபா புஸ¤குனி ஷ்ஞூ - ம்கூம். ஒன்னும் புரியலை.

என்ன மொழியிது? யாருடைய பெயரிது? எந்த தேசத்து தலைநகர்? கடித்து சாப்பிடும் ஊதா நிற தின்பண்டமா? ஏதாவது அறிவியல் சமாச்சாரமா? எத்தனை நேரம் தலையை பிராண்டினாலும் விடை கிடைக்காது. விட்டு விங்கள். அப்படியன்று இருந்தால் தானே? இல்லாத வார்த்தைகள் சிந்தனைகளைத் தூண்டா. 'கபாபுஸ¤குனிஷ்ஞூ' பற்றி நான் கேட்காமல் நீங்களாக யோசித்திருக்கிறீரா? 'இல்லை' என்பது உங்கள் பதில் எனில் மேலே படியுங்கள். 'ஆம்' என்றால் நேராக பஸ் பிடியுங்கள் கீழ்ப்பாக்கத்துக்கு.

"காதல் பற்றி 250 வரிகளுக்கு மிகாமல் இரண்டு பக்கக் கட்டுரையன்று வரைக" என்று இந்தக்காலத்து நாலாங்கிளாஸ் பிள்ளைகளிடம் சொன்னீர்களேயானால் குறைந்தபட்சம் நாலு வரியாது சொந்தமாக எழுதிவிடுவார்கள். இதைபற்றி ஆண்டாண்டு காலமாய் கவிதைகள் தீட்டி, காவியங்கள் புனைந்து, திரைப்படங்கள் இயற்றி இயற்றி, பட்டி தொட்டிகள் முதல் பட்டிமன்றங்கள் வரை பேசித் தீர்த்திருக்கிறோம். ஏனென்றால் பெண் என்கிற பண்புகளையும், அமைப்பையும் பெற்ற மனித உடலுக்கும் (அதாவது பொருளும்) ஆண் என்கிற பண்புகளையும், அமைப்பையும் பெற்ற மனித உடலுக்கும், இடையே நிகழும் 'பண்பான' செயல் காதல். சுருக்கமாக சொன்னால் காதல் என்பது மனிதன் என்னும் பொருளின் பண்பு.

ஆனால் 'கபாபுஸ¤குனிஷ்ஞூ' பற்றி யாகவா முனிவர் தவிர்த்து வேறு யாராலும் பதில் சொல்ல இயலாது.

ஒழுங்கமைப்பான சிந்தனைக்கு ஒரு வெளிக் காரணி அவசியம். எல்லா எண்ணங்களுக்கும் ரிஷிமூலம் ஏதாவது ஒரு பொருளாகத்தானிருக்கும். பொருட்களின் விளைவுதான் எண்ணம்;சிந்தனை;கருத்து. நம்மின் எல்லா எண்ணங்களையும் அலசிப் பாருங்களேன். பொருட்களைப் பற்றியோ, பொருட்களின் பண்பைப் பற்றியோ அல்லது பொருட்களின் செயல்பாட்டினைப் பற்றியோதான் அமைந்திருக்கும். அர்த்தபூர்வமான சிந்தனைக்கு பொருள் மூலாதாரம்.

சூழல் எண்ணங்களை வெகுவாக பாதிக்கிறது. குப்பையில் இருந்து குண்டுமணி முளைப்பது அரிது. அதுவும் சுயம்புவாக முளைக்காது. எந்தக் காக்காயாவது அசிங்கம் பண்ணவேண்டும். ஒவ்வொரு சமூகமும் வளர்ப்பும் ஒரே விஷயத்தைப் பற்றி வெவ்வேறான எண்ணங்களை தோற்றுவிக்கின்றன. காய்கறி சந்தையின் பாஷையும், இலக்கிய கூட்டங்களின் சொல்லாடலும் வேறுவேறு தானே?

இவைதான் நம் தமிழ் சினிமா ஆள் மாறாட்டக் கதைகளின் தளம்! நகைப்புக்காக இருந்தாலும் அத்தனையும் உண்மை. 'மைக்கேல் மதன காம ராஜனில்' மதனாக நடிக்க அவதிப் படும் ராஜு(முழுப்பெயர் ஞாபகமில்லை), மதன் போகிற போக்கில் சொல்லும் 'catch my point' ஐக் கேட்டு மயன்கிப்போய், "அதெல்லாம் அப்டியே வரது தான் இல்ல" என்று வியப்பார் கமல். இந்த மெல்லிய, நுண்ணிய நகைச்சுவையை எழுதிய கிரேஸி மோகனின் சிந்தனை வியக்கவைப்பது. எல்லோருக்கும் யாரைப் பார்த்தாவது ஒரு தரமாவது வரும் அந்த எண்ணத்தை மெட்ராஸ் தமிழில் வழங்கிய கமலின் திறன், ச்ச... அதெல்லாம் அப்டியே வரது தான் இல்ல.

தி.ஜா., கி.ரா., இரா.மு., லா.சா.ரா., ஜெகா., ரெ.கா., வி.கா.(நான் தான்) - ஒவ்வெருவருக்கும் தனித்தனியான் வார்த்தை பிரயோகங்கள், ரேகை போல. ஒருத்தரின் எழுத்தே கூட காலப் போக்கில் மாறிவிடுகிறது. வைரமுத்துவின் ஆரம்ப கால - 'ராஜ சுகம்', 'ராஜ மாலை', 'பொன்வேளை' - பிரயோகங்களை இன்று காண முடியாது. காலத்திற்கேற்ப சிந்தனைகள் மாறிப் போகின்றன. அவைகளை வெளிப்படுத்தும் விதங்களும் திறம்படுகின்றன.

ஷேக்ஸ்பியருக்கும் வள்ளுவருக்கும், ஏன் பாரதிக்குமே கூட இன்றைக்குப் புழக்கத்திலிருக்கும் பல வார்த்தைகள் புரியாமல் போவதில் ஆச்சரியமேதுமில்லை. தற்காலச் சொற்றொடர்கள் பலவற்றின் அர்த்தச் செறிவு ஆழமானவை. நூற்றாண்டுகள் கடந்து வந்திருக்கும் மனிதச் சிந்தனைவளத்தின் தாக்கம் நம் மொழிகளில் பொதிந்துகிடக்கிறது. தீவிரவாதம் என்கிற சொல்லுக்கு இன்றைக்கு இருக்கும் பொருள் வேறு; பாரதி காலத்தில் பொருள் வேறு. பாரதியே தீவிரவாதிதானே?

தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களின் மொழி தனிச்சிறப்பானது - நேர விரயம் செய்யாதவாறு செதுக்கப்பட்டவை (Engineered words). விளம்பரங்கள் இன்னும் அடர்த்தியானவை. 'Future Shock' எழுதிய ஆல்வின் டா·ப்லர் பத்திரிக்கைகள் படிக்கும் சராசரி அமெரிக்கன் தினமும் 10000 முதல் 20000 வார்த்தைகளால் தாக்கப்படுவதாகக் கூறுகிறார். FM கேட்பவர்கள் மேலும் 11000 வார்த்தைகள் ஜீரணம் செய்கிறார்களாம். தொலைக்காட்சி பார்ப்பவராயிருந்தால் இன்னுமொரு 10000 வார்த்தைகள். 'கண்ணைப் பார் சிரி' முதற்கொண்டு கடலை வாங்கிய துண்டுப்பேப்பர் இலக்கியம் வரை கணக்குப் போட்டீர்களென்றால் ஏறக்குறைய 50,000 வார்த்தைகளுக்கு மேல் தேரும். இத்தனை வார்த்தைகளும் ஓயாமல் நம் மூளையை குடைந்தெடுக்கின்றன. சிந்தனைகளைத் தூண்டுகின்றன. மூச்சுத்திணரும் இவ்வழுத்தம் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டேயிருக்கிறது. ஆல்வின் இதை எழுதியது 1970-ல். இப்போது வலை, மின்னஞ்சல், மடலாற்குழுக்கள், SMS தந்தி எல்லாம் சேர்ந்துகொண்டுவிட்டது.

சிந்திக்காமல் இருக்கவே முடியாது இனி வரும் சமூகம்.