<$BlogRSDUrl$>

Sunday, November 30, 2003

முறுக்கு வியாபாரி முனுசாமி 

"It is hard to remain uninvolved" - இப்படி ஒரு வசனம் வருகிறது 'The Quiet American' (முக்கியமான படம். இதுபற்றி இன்னொரு நாள் பேசுவோம்.) திரைப்படத்தில். அது எத்தனை உண்மை தெரியுமா? நீங்கள் என்னதான் பட்டுக்கொள்ளாமல் இருந்தாலும் சில விடயங்கள் நம்மேல் வந்து விழுந்து பிராண்டும்.

பாபர் கைபர் கணவாயைக் கடந்ததைவிட மகா முக்கியமான நிகழ்வொன்று சில வாரங்களுக்கு முன் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது. அது என்னவென்றால் இரண்டு இலக்கியவாதிகள் வாளை எடுத்துசுழற்றிக் கொண்டது. இலக்கியவாதிக்கு எதற்கு வாள் என்று என்னிடம் கேட்காதீர்கள். நல்ல வேளை இதற்காக "பாரத் பந்த்" நடக்காதது நம் பேரதிர்ஷ்டமே.

நிற்க.

நானொரு கதை சொல்லப்போகிறேன். இது தீவிர, மித, மெல்லிய மற்றும் நுண்ணிய என்ற எந்த இலக்கியப் பாகுபாட்டிற்குள்ளும் வராது என்பதை முன்னரே சொல்லிவிடுகிறேன் (என்னைப் போல எல்லோரும் இருந்துவிட்டால் சில பேப்பர்கள் செலவாகாமல் மிச்சப்படும். வலையை பொறுத்தவரையில் சில 'மெகா பைட்டுக்கள்'!). இது என் சொந்தக் கதை. எந்த 'சதவீதத்தினரின்' பிரதினிதியும் அல்ல நான். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. இந்தக் கதை வேறு ஏதாவது நிகழ்ச்சியை நினைவுபடுத்தினால் நான் பொறுப்பல்ல. அது உங்கள் கற்பனை.


முறுக்கு வியாபாரி முனுசாமி
********************

1. சுந்தர காண்டம்

ஒரு ஊரில் ஒரு முறுக்கு வியாபாரி இருந்தார். அவர் கடற்கரையில் முறுக்கு விற்பவர். கடலின் அழகை ரசிப்போரும், காற்று வாங்க வந்தவர்களும், காதலர்களும், கணவான்களும், வயோதிகர்களும்,சிறுவர்களும், ஏன் அங்கேயே முறுக்கு சுட்டு விற்கும் வியாபாரிகளும் கூட இவரின் முறுக்கைச் சுவைத்துவிட்டு, 'நல்லாயிருக்கு', 'அதிஅற்புதம்', 'பரவாயில்லை', 'சகிக்கவில்லை' என்று பலரும் பலவாரியான கருத்துக்களை சொல்லிப்போனார்கள். இப்படி அவரது முறுக்கு விற்பனை ஓடிக்கொண்டிருந்தது.

அதே ஊரில் ஒரு புகழ்பெற்ற ஒரு தியேட்டர் கம்பெனி இருக்கிறது. தியேட்டர் என்றால் அதற்கு முதலாளி, மேலாளர், பொருளாளர், அடியாட்கள் போன்ற இத்யாதிகள் இருக்குமில்லையா? இது ஒரு பக்கம். இந்த திரையரங்கு அதிபதிக்கு வேறு சில வெளி வேலைகளும் உண்டு. அப்படிப்பட்ட வேலைகளில் ஒன்று சாராயக்கடை. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை சாராயக்கடை ஏலம் நடைபெறுவது வழக்கம். அப்போது தன் பலம், புலம், சுற்றம் அனைத்தையும் பயன்படுத்தி சாராயக்கடை ஏலத்த்ல் வெற்றிபெற முயற்சிப்பார் அதிபர். ஊர் என்றால் ஒரு தியேட்டர் மட்டுமா இருக்கும்? ஆக அதே ஊரில் புகழ்பெற்ற இன்னொரு திரையரங்கும் உண்டு. அந்த திரையரங்கின் அதிபரோ ஒரு பெண். (இவரது பிரதாபங்களைப் பற்றிக் கூற இன்னொரு கதையல்ல காவியமே படைக்கலாம். அவையெல்லாம் நம் முறுக்கு வியாபாரக் கதைப்புலத்திற்கு வெளியில் விழுவதால் இப்போதைக்கு விட்டுவிடுவோம்.) அந்தப்பெண் அதிபதியானதோடு நின்றாரா? போனமுறை சாராய ஏலத்திலும் வெற்றி பெற்று ஊரிலுருக்கும் எல்லாச் சாராய கடைகளையும்வழித்துக்கொண்டுவிட்டார். இப்போது இரண்டு திரையரங்கு அதிபர்கள் கதையில் வந்துவிட்டபடியால் முதலில் வந்தவருக்கு கந்தசாமி என்று நாமகரணமிடுகிறேன். (தி.மு.க - தியேட்டர் முதலாளி கந்தசாமி என்று சுருக்கமாக அழைத்துக்கொள்ள நீங்கள் ஆசைப்பட்டால் அதற்கு நான் தடையில்லை!). இன்னொருவரை ஜெயந்தி என்று வைத்துக்கொள்வோமா?சாராயக்கடை ஏலம் நடக்கும் போது நடக்கும் அசிங்கங்களை காணச் சகிக்காது. "நான் என் அண்ணாவைப் போல் கடமை-கண்ணியம்-கட்டுபாட்டோடு வாழ்வேன்" என்று சொல்வாரே தவிர, சாராயக்கடை ஏலம் என்று வந்துவிட்டால் கண்ணியமெல்லாம் காற்றில் பறந்து ஜெயந்தி பெண் என்பதால் சகட்டமேனிக்கு பேசுவார். தியேட்டர் முதலாளி கந்தசாமிக்கு இதுபோல சாராயக்கடை, திரையரங்குத் தொழில் போக மிச்சமிருக்கும் வேளைகளில் முறுக்கு சுடுவதிலும் ஆர்வம் உண்டு. ஆகையால் தன் சினிமாக் கொட்டைகையில் முறுக்குக்கென்று தனி கடையே வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அந்த ஊரில் ஒரு சிறுவனும் இருந்தான். அவனுக்கு வேறு வேலைகள் ஏதுமில்லாததால், அவனது மிதிவண்டியில் கடற்கரை வரை சென்று முறுக்கு வாங்கிச் சாப்பிடுவான். தியேட்டருக்கு போனால் 'ஈ' மொய்க்காமல் இருந்தால் அந்த முறுக்கையும் வாங்கி சாப்பிடுவான். பேதமில்லை. சிறுவனுக்கு விநோதன் என்று பெயரிடுவோமா? விநோதனுக்கு ஊரில் நிறைய நண்பர்கள். அவர்களும் விநோதனைப் போலவே மிதிவண்டியோட்டிகள்.

--------------------
2. யுத்த காண்டம்

ஒரு நல்ல மாலை நேரத்தில் நல்ல கூட்டம் வரும் சமயம். நம் முறுக்கு வியாபாரி அன்று புதிதாய் சுட்ட முறுக்குகளை விற்பதற்கு கூட்டம் சேர்த்தார். முறுக்கு விற்பவர் தன் புதிய முறுக்கைப் பற்றியோ அல்லது தான் இதுவரை சுட்ட ஆயிரக்கணக்கான முறுக்குகளைப் பற்றியோ சொல்லி முறுக்கு விற்றிருக்கலாம்; அல்லது முறுக்கு சுடும் கலையைப் பற்றி சொல்லியிருக்கலாம். வெளியூர்களில் எப்படி முறுக்கு விற்கிறார்கள்; சுடுகிறார்கள் என்று அலசியிருக்கலாம். இல்லையென்றால் "பொதுவாக தியேட்டர் போன்ற பொதுவிடங்களில் விற்கும் முறுக்குகளில் 'ஈ' மொய்க்கும்; காரலான எண்ணெயில் செய்தது; அது சுகாதாரக் கேடு" என தன் அபிப்ராயத்தை சொல்லாம். இப்படித்தான் நேர்மையான வியாபாரிகள் முறுக்கு விற்பார்கள். வியாபார தர்மம் என்று ஒன்றிருக்கு இல்லையா?

ஆனால் நம் கடற்கரை வியாபாரியோ அப்படியெல்லாம் நேர்மையாகவோ மதிப்பாகவோ நடந்துகொள்ளாமல் "தியேட்டர் முதலாளி கந்தசாமி சுடும் முறுக்கெல்லாம் முறுக்கேயல்ல. நான் சுடுவது மட்டும் தான் முறுக்குவகையில் சேரும்." என்று சொல்லிவிட்டார். முறுக்கு சுவைக்க வந்த கடற்கரைக் கூட்ட்த்தில் சலசலப்பு. தேவையில்லாமல் ஏன் தியேட்டர் முதலாளியை வம்புக்கிழுக்கவேண்டும் என்று தோணும் போதே நம் முறுக்கு வியாபாரி ஒரேயடியாகப் போட்டார் இப்படி - "கடற்கரையில் முறுக்கு விற்கும் எல்லோர் சார்பாகக் கூறுகிறேன். கந்தசாமியின் முறுக்கு நமத்துப் போனது. அது பழைய சரக்கு". உடனே கடற்கரை முறுக்கு வியாபாரிகள் இந்த ஆள் சேர்ப்பு வித்தையில் மயங்கி 'ஆமாம் ஆமாம்' என்று தலையாட்டினார்கள்.

சேதி எப்படியோ கந்தசாமிக்கு எட்டிவிட்டது. திரையரங்கு முதலாளி கந்தசாமி ஊரில் பெரும் புள்ளி. கடற்கரையில் முறுக்கு விற்பவர் சொல்வதால் திரையரங்கில் முறுக்கு வியாபாரம் ஒன்றும் பாதித்துவிடாது. இது தெரிந்து கண்ணியமாக தன் பெரிய மனிதத்தனத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். வழக்கம் போல கண்ணியம் காற்றில் பறந்தது. வார்த்தைகள் வரம்பு மீறி வந்துவிழுந்தன. தன் தியேட்டரில் இடைவேளையில் 'முறுக்கு வியாபாரி முணுசாமி கடற்கரையில் திரியும் ஒரு கழுதை' என்று சிலைடு போட்டுக் காண்பித்தார். தியேட்டரில் சினிமா பார்க்க வந்த பல பேருக்கு அன்றைக்குத் தான் முனுசாமி என்பவர் கடற்கரையில் முறுக்கு விற்கிறார் என்று தெரியவந்தது என்பது வேறு விஷயம்.

கடற்கரையில் முறுக்கு விற்கும் சிலர் வேட்டியை மடித்துக் கொண்டு தங்களின் முறுக்கு டப்பாக்களையும் கீழே கிடாசிவிட்டு நம் முறுக்கு வியாபாரிக்கு கட்சி சேர்த்தார்கள். கடற்கரை வழியாகப் போகும் எல்லா பேருந்துகளிலும், ஊர்திகளிலும் இதே பேச்சு. ஒரு சிலர் தியேட்டர் முதலாளி பக்கம்; ஒரு சிலர் முறுக்கு வியாபாரி பக்கம். இரண்டு கட்சிக்காரர்களும் கையில் கிடைத்ததை எடுத்து வீசிக்கொண்டார்கள். கடற்கரைச் சாலையே கலவரப் பகுதியாகிவிட்டது.

கொஞ்ச நேரம் கழித்து கலவரம் ஓய்ந்தாற் போலிருந்த சமயத்தில் எல்லாத் 'திசைகளுக்கும்' சென்றுவிட்டு அந்தப் பக்கமாக வந்த பேருந்தின் ஓட்டுனர் தியேட்டர் முதலாளி கந்தசாமியின் நண்பர் போலும். முதலாளி சொன்னது தான் 'ரைட் ரைட்' என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பிச் சென்றுவிட்டார். அதுவரைக்கும் விநோதனைப் போலவே பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மிதிவண்டியோட்டிகள் இப்போது கலகத்தில் கலந்து கொண்டுவிட்டனர். சம்பந்தப் பட்டுக் கொள்ளாமல் போகும் பேருந்துகளை நோக்கி கற்களை வேறு வீச ஆரம்பித்தார்கள். இப்படியாக பல வாரங்களுக்கு முற்றிய இந்தச் சண்டை சரித்திரத்தில் 'முறுக்கு வியாபாரக் கலகம்' (சிப்பாய் கலகம் போல) என்று பெயர் பெற்றது.

விநோதனுக்கோ பெரும் கவலை - 'என்னடா நம் நண்பர்கள் போய் இந்த கைகலப்பில் கலந்துகொண்டார்களெ' என்று. முறுக்கு வியாபாரச் சண்டையில் முறுக்கு சுடும் கலை முடங்கிப் போய்விட்டது. முறுக்கு சுட செலவழிக்கும் நேரத்தை விட இந்த வெட்டிச் சண்டையில் தான் நேரத்தை செலவழிக்கிறார்கள் சுத்தமாய் முறுக்குக் கலைஞர்கள். சண்டை போடுகிற நேரத்தில் எப்படிச் சுவையாக முறுக்கு சுடலாம் என்று யோசித்திருந்தால் முறுக்குப் பிரியர்களுக்கு நாலைந்து நல்ல முறுக்குகளாவது கிடைத்திருக்கும்.

-------------------
3. அந்திமக் காண்டம்

விநோதனுக்கும் முறுக்கு சுடுவதில் ஆர்வமிருக்கு. எந்த முறுக்குப் பிரியருக்குத் தான் தானே முறுக்கு பிழிந்து சுவைப்பதில் ஆசையிருக்காது? விசாரித்துப் பார்த்ததில் இப்படிப் பட்ட முறுக்குச் சண்டைகள் நிறைய நடப்பது முறுக்குலகில் சகஜம் என்றும் தெரிந்துகொண்டான் விநோதன். தன் ஊரில் நிறையப்பேர் முறுக்கு சுடுவதில் வித்தகர்களாக இருந்தாலும் இந்தச் சச்சரவுகளில் சிக்கிச் சீரழிந்து விடுவோமோ என பயந்து தங்களின் வீட்டிலேயே முறுக்கு சுட்டுச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கி விடுகிறார்கள் என்பதும் தெரிய வந்தது. பிற்காலத்தில் தானும் சுவையான முறுக்குகள் சுட்டு தன் ஊரிலே விற்கலாம் என்று கண்ட கனவு பரணிலிருந்து விழுந்து நொருங்கும் அடுக்கு முறுக்குகளைப் போல் சின்னாபின்னமாகிப் போனது. நல்ல வேளையாக தனக்கு மிடிவண்டியன்று இருப்பது சட்டென்று நினைவில் உதிக்கவும், தன் போலவே உள்ள சக முறுக்குப் பிரியர்களை அழைத்துக் கொண்டு வேறு வேறு ஊர்களுக்கு சென்று முறுக்கு வாங்கிச் சாப்பிடலாம் என்று கிளம்பிவிட்டான் விநோதன்.

விநோதனுக்கு மிதிவண்டி இருக்கு; பெடலை அழுத்திக் கிளம்பிவிட்டான் வேறூரைப் பார்த்து. என் போன்ற பாதசாரிகள் என் செய்வது? முறுக்குச் சண்டைகளைப் பார்த்துக்கொண்டே சாகவேண்டியது தான்.

கதையின் நீதி: யார் யாருக்கு முறுக்கு சுட வருகிறதோ அல்லது ஆர்வமிருக்கிறதோ சுட்டுப் போடுங்கள். சுவையான முறுக்கு விற்றுத் தீரும்.

Monday, November 24, 2003

நான் பிடித்த நிலா நவம்பர் 8-ம் தேதி வந்த சந்திர கிரகணத்தை பதிவு செய்தேன். சுமார் ரகத்தில் வந்திருக்கு. கடும் குளிர். தெளிவாக காமிராவைக் குவிக்க (Focus-இதற்கு என்ன தமிழில்?!) முடியலை.

Wednesday, November 19, 2003

களவு போன 'அமெரிக்கா' 'அமெரிக்கா', 'அமெரிக்க வாழ்வு', 'அமெரிக்க கனவு' என்றதும் உங்கள் மனதில் தோன்றுவது என்ன? சுதந்திரமான வாழ்க்கை, விரைவுச்சாலைகள், பல்லங்காடிகள்(malls), மக்டானால்ட்ஸ், பர்கர் கிங், நாஸ்டாக்(nasdaq), பங்குச்சந்தை, வால் ஸ்ட்ரீட், வெள்ளை மாளிகை, என்ரான் போன்ற ஐக்கிய மாகாண சின்னங்களா? அப்படியென்றால் மிச்சமுள்ள 550 மில்லியன் மனித ஜீவிகளையும், 7,785,000 சதுர மைல் நிலப்பரப்பையும், அதன் இருப்பையும் இழிவு செய்கிறீர்கள் என்று அர்த்தம்!

Dictionary.Com-ல் இட்டுப் பார்த்தபோது வந்தவை.

adj
1. Of or relating to the United States of America or its people, language, or culture.
2. Of or relating to North or South America, the West Indies, or the Western Hemisphere.
3. Of or relating to any of the Native American peoples.
4. Indigenous to North or South America. Used of plants and animals.
n.
1. A native or inhabitant of America.
2. A citizen of the United States.
3. American English.

adj 1: of or relating to the United States of America or its people or language or culture; "American citizens"; "American English"; "the American dream" [syn: American] 2: of or relating to or characteristic of the continents and islands of the Americas; "the American hemisphere"; "American flora and fauna" [syn: American] n 1: a native or inhabitant of the United States [syn: American] 2: the English language as used in the US [syn: American English, American language, American] 3: a native or inhabitant of America [syn: American]

Merriam-Webster பரவாயில்லை. US தொடர்பான பதங்களை கடைசியாகத் தான் தருகிறது.

ஐரோப்பிய காலனியர்கள் சொல்லும் கதை இதுதான்.கொலம்பஸ் "கண்டுபிடித்தாகக்" கூறப்படும் அந்த நிலப்பரப்பு அமெரிக்கா என்று பெயர் பெற்றது 'அமெரிகோ வெஸ்புசி'(Amerigo Vespucci) என்ற அவரது சகாவின் நினைவாக! மெய்யாகவா? கொலம்பஸ் கண்டுபிடித்துவிட்டு தன் சகாவிற்கு ஏன் பெயரை விட்டுக் கொடுக்க வேண்டும்? சற்று உதைக்கிறது.

பூர்வீக அமெரிக்க நிபுணர் ஜாக் ·போர்ப்ஸ்(Jack Forbes), கொலம்பஸ் வருவதற்கு முன்னரே மராக்கா(Maraca), அமரகோபா(Amaracopa) போன்ற பெயர்கள் வழக்கில் இருந்ததாகவும், கரீபியன் பகுதியிலிருந்து வெனின்சுலா, பிரேசில் வரையுள்ள பகுதி அமெரிகாமிக்(Americamique) என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுகிறார். நிகராகுவா பகுதிகள் 'டியாரா மராக்கா'(Tierra Maraka) என்று இருந்தனவாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவிலிருந்து வந்து பூர்வீக அமெரிக்கர்களை துரத்திவிட்டு அவர்களின் நிலங்களைப் பிடுங்கி குடியமைத்துக் கொண்டவர்கள், மெக்சிகோவின் பெரும்பகுதியைக் கைப்பற்றினர். 1898ல் கியூபா, காம்(Gham), பிலிப்பைன்ஸ், போர்ட்டோ ரீக்கோ அனைத்தையும் வழித்துக் கொண்டனர். இந்தக் காலனிகளுக்கு அவர்கள் இட்ட பெயர் அமெரிக்கா (Ameican Colonies).

1960-70களில் மெக்ஸிகன்-அமெரிக்கன், ஆப்ரிக்கன்-அமெரிக்கன் போன்ற ஒட்டுப் பெயர்களை அநேகப்பேர் எதிர்த்தனர். லத்தீனோக்காரர்கள் தங்களை 'சிகானோக்கள்'(chicanos) என்று அழைத்துக் கொண்டனர். லாங்ஸ்டன் ஹியூக்ஸ், மால்கம் எக்ஸ், மார்ட்டின் போன்ற பல கருப்புத் தலைவர்கள் ஆப்பிரிக்கன்-அமெரிக்கன் என்ற பெயரை அடிமைத்தனத்தின் நீட்சியாகக் கண்டனர். அமெரிக்கன் என்பது வெள்ளையினத்தை குறிப்பதாக ("American is White") டோனி மோரிஸன் Playing in the Dark என்ற தனது புத்தகத்தில் குறிக்கிறார். 70களின் துவக்கத்தில் கிளம்பிய உத்வேகம் பலரை 'Amerikka' என்று எழுத வைத்தது. அது ஐரோப்பிய காலனித்துவத்தை எதிர்க்கும் சொல்லாகக் கருதப்பட்டது.

இன்று முற்போக்குவாதிகளும், லத்தீன் அமெரிக்க தலைவர்களும், பல இடது சாரி எழுத்தாளர்களும் கூட 'அமெரிக்கா' என்ற வார்த்தையை சுயநினைவின்றி எதேச்சையாக ஒரு நாட்டைக் குறிக்க பயன்படுத்தக் காணலாம். அந்த வார்த்தைக்குப் பின்னால் ஒதுக்கப்பட்ட குரல்களை யாரும் காண்போரில்லை.

அமெரிக்கா என்பது ஒரு நாட்டைக் குறிக்கும் சொல்லன்று. ஐக்கிய மாகாணத்தில் வாழ்பவர்கள் தங்களை அமெரிக்கர்கள் எனத் தாராளமாக அழைத்துக்கொள்ளட்டும். ஆனால் அது அவர்களுக்கு மட்டுமே சொந்தமான் வார்த்தையல்லவே.
வட, தென் அமெரிக்கக் கண்டங்களில் வாழும் அத்தனைப்பேரும் அமெரிக்கர்கள் - இந்தியா, சீனா, ஜப்பான், இலங்கை, மலேசியா, ஈராக், ·பிலிப்பைன்ஸ், வட-தென் கொரியாக்கள், வியட்நாம் போன்ற எல்லா நாடுகளிலும் வாழும் மக்கள் எப்படி 'ஆசியர்' என்ற பெயரினைப் பெறுகின்றனரோ, அதே போல.

நவீன ஆங்கிலப் பயன்பாடான 'கார்ப்பொரேட் அமெரிக்கா', 'அமெரிக்கன் எம்பயர்' போன்ற அரசியல் முக்கியத்துவம் கொண்ட வார்த்தைகளை உபயோகிப்பதில் பேதமில்லை. ஆனால் ஐக்கிய மாகாணம் என்கிற ஒற்றை நாட்டைக் குறிக்கவோ, அங்கு வாழும் மக்களைச் சொல்லவோ, அங்கிருக்கும் வாழ்வுமுறையைச் சுட்டவோ பொத்தாம் பொதுவாக 'அமெரிக்கா' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சர்ச்சைக்குரியதாகிறது. பேரூடகங்கள் லாவகமாக பயன்படுத்தும் 'American Dream, 'It is very American', 'unamerican' போன்ற பிரயோகங்களைக் உன்னிப்பாகக் காணுங்கள். 'அமெரிக்கா', 'அமெரிக்கன்' என்பவை வெறும் வார்த்தைகளல்ல, அது ஒரு ஆதிக்க மனப்பாங்கு; ஐக்கிய மாகாண தேசியவாதத்தை (US Nationalism), அதன் எதேச்சதிகார மனப்பாங்கை உலகமயமாக்கும் வெறிச்சொல் அது. இங்கு 'God Bless America', 'Power is Pride', 'Don't mess with us' போன்ற கார்களின் பின்னால் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களைப் பார்க்கும் போது இது தெள்ளெனப் புரிபடும்.

அடுத்த முறை 'அமெரிக்கன்' என்று விளிக்கும் போது கொலம்பியனும், மெக்ஸிகனும், நிகராகுவனும், சிலியனும், பனாமியனும், எல் சால்வடாரியனும், அமெரிக்கனே என்பதை நினைவில் கொள்க.

-- வினோபா ; மூலம் 'Z'

இப்போதெல்லாம் ஐக்கிய மாகாணத்தில் வாழ்பவர்களே பேரூடகங்கள் சொல்லும் 'அமெரிக்கன்' என்ற வரைமுறைக்குள் வருவதில்லை. இதை சொடுக்கிப் பாருங்கள் உங்களுள் 'அமெரிக்கன்' இருக்கிறானா என்று.


Tuesday, November 18, 2003

அல்லாருக்கும் வணக்கம் 

வாத்யார் வேலை பாத்தது படா ஷோக்காயீந்துச்சுப்பா... இன்னமும் அந்த மப்பு கலையில.

விளம்பரங்கள் அங்கு வரக்கூடாதே என்று கம்முன்னு இருந்தேன். இங்க சொல்லலாம். திண்ணையில் என் கவிதை வந்திருக்கு... கவனித்தீர்களா?


Wednesday, November 12, 2003

வாத்தியார் வேலை 

வலைப்பூ-வில் வாத்தியார் வேலை பார்த்துக் கொண்டிருப்பதால் ஒரு வாரம் லீவு. நண்பர்கள் மன்னிக்கவும்.

அன்புடன் வினோபா

Thursday, November 06, 2003

விழாக்கோலம் பூண்டிருக்கு வானம்! சில வாரங்களாகவே வானம் நமக்கு பல (வான?!)வேடிக்கைகளைக் காட்டி வருகிறது. சூரியப்புள்ளிகளின் சேஷ்டை நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துகொண்டே போகின்றன. செவ்வாயன்று நிகழ்ந்த சமீபத்திய வெடிப்பு X28ம் ரகத்தைச் சேர்ந்ததாம். இதுவரை ஏற்பட்டதிலேயே பெரியது.

இந்தச்சேதியைத் தெரிந்துகொண்ட சந்திரனும் கேளிக்கையில் கலந்து கொள்ள உத்தேசித்துள்ளது. நமக்கு கொண்டாட்டம் தான் போங்கள்!

டம டம டம டம டம டம டம டம் டம் டடடம் டடடம் டாம்...
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது யாதெனில், நவம்பர் 8ம் தேதி (வரும் சனிக்கிழமை) மாலை 8:06 மணியளவில் வட அமெரிக்கக் கண்டத்தில் வடக்கேயுள்ள கீழைக்கடற்கரைப் பகுதிகளில் "நிலாப் பெண்ணின் கண்ணாம்பூச்சி" என்கிற வான வேடிக்கை (அரைமணி நேரம் மட்டுமே) நிகழ்த்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
டம டம டம டம டம டம டம டம் டம் டடடம் டடடம் டாம்...

பூரண சந்திர கிரகணம் ஏற்படவிருக்கிறது. ஐக்கிய மாகாணத்தில் வடகிழக்குக் கரையோரம் இருப்போர் பாக்கியசாலிகள். சரியாக இரவு 8:06க்கு பூரணம் தொடங்குகிறது. 25 நிமிடங்கள் தான் இருக்கும் இந்தக் கிரகணம். weather.com-ல் பார்த்துவிட்டேன். அதுவும் ஒத்துழைக்கிறது. ஆகவே அன்று மாலை வேலை வெட்டி எது இருந்தாலும்(சனிக்கிழமை ஆபிஸ் போகும் புண்ணியவான்கள் வெளியே வந்து எட்டிப்பார்த்துவிட்டாவது போங்கள்) அப்படியே போட்டுவிட்டு வானத்தை அண்ணாந்து பார்த்து அதிசயிக்க ஆஜராகிவிடுங்கள். 1

ஐரோப்பியக் கண்டத்தில் இருப்போர் முழித்திருந்தால் பார்க்கலாம். அவர்களுக்கு 1:06க்கு பூரணம் வரத்துவங்கும். ஆசியக்கண்டத்தில் இருப்பவர்கள் நன்றாக இழுத்துப் போர்த்தி தூங்கவும். உங்களுக்கு அடுத்தவருடம் மே-4ம் நாள் பூரண கிரகணம் காண்பிக்கப்படும் என்று பட்சி சொல்கிறது.

அடியேன் தொலைநோக்கி உதவியோடு நிழற்படம் எடுக்கலாம் என்றிருக்கிறென். எடுத்தால், கிரகண சித்தி நல்லபடியாய் அமைந்து ஒழுங்காக வந்தால் இங்கு இடுகிறேன். இல்லையேல் கிரகண பலன் கழிக்க குப்பைத்தொட்டியில் சேர்த்துவிடுகிறென்.

Special thanks to Stephen Barnes for the eclipse picture.

Wednesday, November 05, 2003

ஒரு வீதி நாடகக் கலைஞனுக்கு வெற்றி!! சப்தர் ஹஷ்மியை ஞாபகம் இருக்கிறதா? உங்களுக்கு ஞாபகம் இல்லாமலிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. காஸியாபாத் வீதிகளில் அவரை அடித்துக் கொன்றவர்களே மறந்துவிட்டிருப்பர் அவரை.

1989, ஜனவரி 1ம் நாள். ஜந்தாபூர் முனிசிபல் தேர்தல் சமயத்தில் 'உரக்கப் பேசு' (halla bol) என்னும் நாடகத்தை வீதியில் நிகழ்த்திக் கொண்டிருந்த போது குண்டர் படையால் நடுவீதியில் அடித்துக் கொள்ளப்பட்டனர் ஹஷ்மியும் அவரது சக நடிகர் ராம் பகதூரும். சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தோர் அதுவும் நாடகத்தின் ஒரு பகுதி என்றே நினைத்திருந்தனர் வெகு நேரம் வரையில்!

ஜன் நாட்ய மன்ச் என்கிற வீதி நாடக அமைப்பின் தலைவரும், மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருமான அவரைக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரில் இருவர் இறந்துவிட்டனர்! மீதமுள்ள பத்துப்பேரும் குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்டுள்ளனர் பதினான்கு வருடங்களுக்குப் பிறகு. என்ன சொல்லி மெச்ச இந்திய நீதித்துறையின் சுறுசுறுப்பை? 'ஊழ்வினைப்பயன்' (இந்த ஜென்மத்தில் செய்யும் தவறுகளுக்கு அடுத்த ஜென்மத்தில் தான் தண்டனை கிடைக்கும்!) என்னும் இந்துமத சாரத்தை நிலைநிறுத்துகிறார்களா?

காலம் கடந்து வந்தாலும் நீதி கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியே. இதை சப்தர் ஹஷ்மி என்கிற வீதி நாடகக் கலைஞனுக்கு கிடைத்த வெற்றி என்பதைவிட அரசியலில் வன்முறையைக் கலக்கும் வெறியர்களுக்கெதிரான பாடமாகக் கருதுதலே சரி. இது போன்ற வன்முறை வழக்குகள் நாடெங்கும் நூற்றுக் கணக்கில் நிலுவையில் உள்ளன. எத்தனையோ பேர் ஆளுங்கட்சிக்காரர்களாலும் அரசியல் செல்வாக்குப் பெற்ற ரவுடிகளாலும் கொலை செய்யப்படுகிற போது, அரசியல் எல்லைகளைத் தாண்டி சப்தர் ஹஷ்மி பேசப்படுவது அவர் வீதி நாடகக் கலைஞர் என்பதால். அவர் ஜனநாயக முறையில் தனக்கே உரிய அழகியல் பாணியில் தன் கருத்தைச் சொல்லியபோது அடித்துக் கொல்லப்பட்டதால்.

ஊழலுகெதிராய் குரலெடுத்து வெட்டிக்கொள்ளப்பட்ட மதுரை பெண் கவுன்சிலர் லீலாவதிக்கு என்று நீதி கிட்டுமோ?