Thursday, February 03, 2005

"podcasting" - நமது அடுத்த அத்தியாயம்!! 

"podcasting" - நமது அடுத்த அத்தியாயம்!!

அகோரப் பசி வேளையில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுச் செல்லும் வசதி சில ஜீவராசிகளுக்குத்தான் வாய்க்கும். அந்த அதிட்டம் வாய்த்த மானிடர்களில் நானும் ஒருவன். மதியம் வீடுவரை வந்து போவதில் இன்னொரு சுகமும் இருக்கிறது. எனக்குப் பிடித்தமான NPR ரேடியோவை பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு எந்தவித தொந்தரவுமின்றி கேட்டு ரசிக்கலாம். வெள்ளிக்கிழமை இன்னும் விஷேசம் - அறிவியல் கேட்கலாம்.

சில மதியங்களுக்கு முன்பு நான் கேட்ட விஷயத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ளாவிட்டால் தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்காது.

அதான் சொன்னேனே... பணியிடம் வீட்டிற்கு பக்கத்தில் அமைவது சிலருக்குத்தான் கிட்டும். இப்படி பாதி வாழ்க்கையை காரிலேயே கழித்து வெறுத்துப்போய், தன் பயண நேரத்தை உருப்படியாக்க உத்தேசித்த ஒரு மனிதர் நம்மைப் போலவே ஒரு வலைப்பதிவைத் தொடங்கினாராம். ஒரு வித்தியாசம் - அவருடையது ஒரு ரேடியோப் பதிவு; வெறும் 'ஆடியோ'ப் பதிவல்ல. அதன் பெயர் - The Morning Commute; நடத்துனர் - Mr.X! காரில் அலுவலகம் பயணிக்கும் போதோ அல்லது வீடு திரும்பும் போதோ தான் வைத்திருக்கும் 'i-pod'ல் பேசிப் பதிவு செய்துகொண்டு, ஈ-பேயில் வாங்கிய மலிவு விலை மிக்ஸரில் பக்கவாத்திய இசையைப் புகுத்திக்கொண்டு வலையில் ஏற்றிவிடுகிறார். இவருடைய பக்கத்தின் உருப்பினர்கள் (ரசிகர்கள்) அவற்றை தங்கள் 'i-pod'ல் இறக்கிக் கேட்கிறார்களாம். இந்த வசதியைப் செய்து கொடுத்தவர்கள் 'ipod' கொடுத்த ஆப்பிள் நிறுவனத்தார். இந்த தனித்துவமான முயற்சிக்கு 'podcasting' (brodcasting போல) பெயரிட்டிருக்கிறார்கள்.

'பாட்காஸ்டிங்' - வலைப்பதிவைப்போல இன்னொரு சகாப்தத்தை தொடங்கியிருக்கிறது. என்றைக்காவது நம்முடைய கருத்துக்கள் எழுத்துரு பெற்று நாலு பேர் நம் எழுத்துக்களை படிக்கமாட்டார்களா என ஏங்கித் தவித்திருந்த போது வலைப்பதிவு காணல் நீர் போல நமக்குக் கிடைத்ததல்லவா?(மன்னிக்கவும்... மயிர்க்கூச்சரிக்கிறது சற்று பொருங்கள்... ) அதே போல ரேடியோக் கனவுல்ல மானுடர்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் இந்த 'பாட்காஸ்டிங்' (நமது ராமகி-வெங்கட்-காசி-மாலன் போன்ற ஜாம்பவான்கள் புது தமிழ்ப்பதம் கண்டுபிடிக்கும் வரை இப்படியே சொல்கிறேன்! நான் யார் கட்சியும் அல்ல; இப்போதே சொல்லிவிட்டேன்!!)

"அட்ரா சக்கை" என்கிறீர்களா?

இப்போதே பலர் கண்ணில் 'கிளிங்' என்று நட்சத்திரம் மின்னுவதைக் காண்கிறேன். மேற்கொண்டு படிக்க; விவாதிக்க;தமிழில் பாட்காஸ்ட அணுகவும் - 'ipodder.org'. காசி அண்ணாத்தே போலெல்லாம் 'டெக்னொ-கிஜ்மோ' வேளைகளெல்லாம் நமக்கு கைவராததால், தமிழ் 'பாட்காஸ்டிங்'கான பட்டறை அமைக்கும் இலாகாவை அவருக்கும் 'தமிழ்மணம்' குழுவுக்கும் விட்டுவிடுவதாக இதன் மூலம் சகலமானவருக்கும் அறிவித்துக் கொள்கிறேன்.

~~வினோபா.


Comments:
அருணன்பாரதிக்கு வணக்கமும் வாழ்த்தும் வினோபா.
 
Dear Vinu,
Welcome back....
Vootla irukkiya ippo....
podcasting-nnu padicha utane,
postdoc-ing kuudavae oru sattham vanthathu...
ellaam piramai...
 
Post a Comment